முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் சட்டசபையில், “ஆரோக்கியமான விவாதம் இல்லை. லாவணி கச்சேரிதான் நடக்கிறது. தெரு சண்டை போல… குழாயடி சண்டை போல சம்பவங்கள் நடைபெறுகின்றன’’ என்று தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ சந்தைப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு இயக்கத்தை, அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து கருத்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பெ.சண்முகம், ‘‘தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடுநிலைமையுடன் நடந்து கொள்கிறார் என்று பலரும் பாராட்டுகிறார்கள். அப்படி நடந்து கொள்கிறார் என்பது நல்ல விஷயம் தான். இந்த பக்கம் பேசுவதையும் சபைக் குறிப்பில் இருந்து நீக்குகிறார்.. அந்த பக்கம் பேசுவதையும் சபைக் குறிப்பில் இருந்து நீக்குகிறார்.. அதனால் நடுநிலையாக சபாநாயகர் நடந்து கொள்கிறார் என சொல்கின்றனர்.
சட்டசபை நிகழ்ச்சிகளை இப்போது நேரடியாக ஒளிபரப்பு செய்வதனால் அப்படி பேசுவதை நீக்கினாலும் ஒன்றுதான், நீக்கவில்லை என்றாலும் ஒன்றுதான். ஏனென்றால் எல்லாவற்றையும் நாம் காதில் கேட்டு விடுகிறோம், கண்ணால் பார்த்து விடுகிறோம்; இதன் பிறகு சபைக் குறிப்பில் இருந்து நீக்கி என்ன பயன்?
இதுவரை சட்டசபைக்குள் என்ன நடந்தது என நமக்கு தெரியாது. சபைக் குறிப்பில் இருந்து நீக்கியதும் என்ன என்பதும் நமக்கு தெரியாது. இப்பொழுது சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் நம்ம எம்.எல்.ஏ உள்ளே இருக்கிறாரா? இல்லையா? எம்.எல்.ஏ சும்மா உட்கார்ந்து இருக்கிறாரா? தூங்கிக் கொண்டிருக்கிறாரா? நம்ம தொகுதி பிரச்சனையை பேசினாரா? இல்லையா? என தெரிந்து கொள்ளலாம். ஆகையால் சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
ஆனால் சட்டசபையில் ‘‘லாவணி கச்சேரி” நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தினுடைய நேரத்தை இப்படி வீணடிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கக்கூடிய ஒரு விஷயம் இது. இதற்கு சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது.
சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைப்பது என்பதற்கு பதிலாக தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பி கூச்சலை ஏற்படுத்துவது, சவால் விடுவது, ஏதோ குழாய் அடி சண்டையைப் போல, தெரு சண்டையைப் போல அங்கே ஒரு சூழ்நிலையை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை தமிழ்நாட்டு மக்கள் ரசிக்க மாட்டார்கள். உங்களை தமிழ்நாட்டு மக்கள் மொத்த பேரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்’’ இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.
