‘‘இறைவனுக்கு வந்த சோதனையாக எடுத்துக்கொண்டு எனது உரையை துவக்குகிறேன்’’ என முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது பேச்சை துவக்கி சட்ட சபையை அதிர வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு!
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க.வின் சீனியர்கள் எழுப்பும் அதிரடி கேள்விகளுக்கு த.வெ.க.வினரும் பதிலடி கொடுப்பதும், இரண்டு தரப்பிலிருந்தும் கூச்சம் குழப்பம் எழுவதும் வழக்கமாகி வந்த நிலையில், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டமன்றத்தில் அடுக்கு மொழியில் பேசி தி.மு.க.வினருக்கு ஆச்சர்யத்தையும், த.வெ.க.வினருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் செய்த நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக அடுக்கு மொழியில் அடுக்கினார். கடந்த காலங்களைக் காலட்டிலும் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள், கோவில் சொத்துக்குள் வாயிலாக கல்வி நிலையங்கள் என தி.மு.க. வின் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே சென்றார் சேகர் பாபு!
மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, ‘‘சட்டப்பேரவையில் அடிக்கடி ‘காணோம்… காணோம்…’ என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்துவதை கேட்க முடிகிறது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, சூரியனை வானத்தில் காணலாம்; சந்திரனை நட்சத்திரங்களுக்கு நடுவில் காணலாம். ஆண்டவன் எங்கே என்றால், ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என்பார்கள். அதுபோல், பசி போக்கும் அன்னதானத் திட்டம், கட்டணமில்லா இலவச திருமணம், விளக்குப் பூஜை, மருத்துவமனை வசதிகள் என எங்கெல்லாம் லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் பயன்பெற்றார்களோ, அங்கெல்லாம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைக் காணலாம்!” என்று பேசிய போது தி.மு.க.வினரின் மேசை தட்டல் சத்தம் ஓங்கி ஒலித்தது.
மேலும், ‘‘எட்டாயிரம் கோடி ரூபாய் ஆலயச் சொத்துக்களை அபகரிப்பில் இருந்து மீட்டு பத்திரப்படுத்தியது நாங்கள்… அதனை மீண்டும் பலருக்கு பத்திரம் போட்டுக் கொடுப்பது நீங்கள்…! இதற்கு பழனி மலை முருகனே சாட்சி..!’’ என ஆளுங்கட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் ஓங்கி அடித்திருக்கிறார் சேகர் பாபு!
