‘‘சட்டமன்றத்தில் இருக்கையை விட்டு எழுந்து, கையை உயர்த்திக்கொண்டு யார் முன்னோக்கி ஓடி வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம்,எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘அவைக்குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவை எல்லாம் டிவியில் ஒளிபரப்பப்பட்டு, சமூக வலைதளத்தில் ரீல்ஸாக பரவுகிறது’’ எனத் தெரிவித்தார்.
அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், ‘‘குற்றச்சாட்டுகளை எந்தப் பக்கம் இருந்து வைத்தாலும், ஆதாரப்பூர்வமான கருத்துகளைச் சொல்வதன் மூலமாகவே அவையின் குறைந்தபட்ச மாண்பை நாம் காப்பாற்ற முடியும். அதே வேளையில், ஆதாரமற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது என்பது அவையின் மரபு. இனி வருங்காலத்திலும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை.
ஏனெனில், அவையின் மாண்பை காப்பாற்றியாக வேண்டும். மேலும், அவைக் குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்காமல் பேச முயற்சிப்பதும், ஆதாரங்கள் இல்லாமல் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில், இரு தரப்பினரும் ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும் என நானும் மக்களும் விரும்புகிறோம். போகிற போக்கிலே அள்ளித் தெளித்துப் போகிற இடமல்ல இது. இங்கு பேசும்போது அவையின் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும். எல்லா பேச்சுகளை நீக்குவது என்பது எனது நோக்கமல்ல. இருப்பினும், அவைக்குப் பயன்தராத, நம் பண்பாட்டுக்கு உதவாத, அவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும், அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், ‘‘சட்டமன்றத்தில் இருக்கையை விட்டு எழுந்து, கையை உயர்த்திக்கொண்டு யார் முன்னோக்கி ஓடி வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
