மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான தலைவராக மத்திய அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும் சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன், அந்தந்த மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று இரவு 7 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கோவளத்தில் உள்ள தனியார் விடுதிக்குச் செல்லும் அவர், முக்கிய நபர்களை சந்திக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர்கள் மாநாட்டில் நாளை அமித் ஷா கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை மற்றும் கர்நாடக துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து விவாதிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் தலைவராக மத்திய அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal