வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி உளுந்தூர் பேட்டையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்த கையோடு முதல்வர் விஜய்யை சந்தித்திருப்பதுதான் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வரை சந்தித்தபோது மேகமலை விவகாரம், கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாகவும், அதேபோன்று நேற்று நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் முதலமைச்சரிடம் பேசியதாக கூறப்படுகிற்து.

இந்த சந்திப்புக்குப் பின்னர் திருமாவளவன் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், “கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என முதலமைச்சர் விஜய் சொல்லியிருக்கிறார்.

தவெகவோடு நாங்கள் இணைந்து நூறு நாட்கள்தான் ஆகின்றன. அவர்களோடு தொடர்ந்து இணைந்து பயணிப்போம் என்பதை நேரடியாக மாநாட்டிலும் நாங்கள் உறுதிப்படுத்தியிருக்கிறோம். ஆளும் கட்சிகளோடு பயணித்தோம்; இனி ஆளும் கட்சியாக பரிணமிப்போம் என்ற ஒரு முழக்கத்தையும் இந்த மாநாட்டிலே நான் முன்வைத்திருக்கிறேன். இன்றைக்கு கூட்டணி அரசில் நாங்கள் அங்கம் வகிப்பதன் மூலம், நாங்களும் ஒரு ஆளும் கட்சி என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி. இந்த வளர்ச்சியை தமிழ்நாட்டு மக்கள் எமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் விருப்பப்படி எங்கள் அரசியல் நிலைப்பாடு இருக்கும். மேகமலை பிரச்சனை, அமுதன் பிரச்சனை ஆகியவை தொடர்பாக நாங்கள் வைத்த கோரிக்கைகள் ஆகும் மற்றப்படியாக, நாங்கள் அரசியல் ரீதியாக சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளோம்.

மேகமலை தொழிலாளர் போராட்டம், வாழிடங்களில் இருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்ற கோரிக்கை ஆகியவை தொடர்பாக சீராய்வு மனுக்களை தாக்கல் செய்து முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அந்தக் கோரிக்கையை மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டார், புரிந்துகொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அமுதன் விவகாரம் வெறும் பிரச்சனையாகவோ, யாங்க்ஸ்டர் பிரச்சனையாகவோ சிலர் சொல்கிறார்கள். அதை மட்டும் ஒரு கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அங்குள்ள பெற்றோர்களிடமும் விசாரித்து, அங்குள்ள பொதுமக்களிடமும், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடமும் விசாரித்து, போதைப் புழக்கம் இருந்ததனால் அதைக் கண்டித்ததால்தான் அவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான் என்ற இன்னொரு வெர்ஷனும் இருக்கிறது.

எனவே, அதனை புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் அமைக்க வேண்டும். அந்த ஒரு பிரச்சனைக்காக மட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்களில் இன்றைக்கு போதைப் புழக்கம் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, அது குறித்து ஆய்வு செய்வதற்கும், அதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு அதிரடிப்படை உருவாக வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சரிடம் முன்வைத்திருக்கிறோம்.”எனத் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal