கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் திமுக வலுவடைய பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வந்தாலும் இழுபறியாகவே உள்ளது.
கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கோவை மாவட்ட திமுகவில் மூன்று மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில் அதை ஐந்தாக மாற்றி அமைத்தது. ஆனாலும் அந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து நடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

தேர்தல் தோல்வியை அடுத்த தமிழகம் முழுக்க அமைப்பு ரீதியாக தி.மு.கவில் மாற்றம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கவுள்ளதாக தெரிகிறது. அதன் படி கோவையில் உள்ள பத்து தொகுதிக்கு 5 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கவுள்ள நிலையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கான மாவட்டச்செயலாளராக வால்பாறை எம்.எல்.ஏ குட்டி (எ) சுதாகர் அல்லது நவநீதகிருஷ்ணன், ஆகியோரின் பெயர்கள் பரவலாக பேசப்படுகிறது.

கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கான மாவட்டச்செயலாளராக குறிச்சி பிரபாகரன் அல்லது சபரி கார்த்திகேயன், சூலூர், சிங்காநல்லூர் தொகுதிகளுக்கான மாவட்டச்செயலாளராக முன்னாள் மாவட்டச் செயலாளர் கார்த்திக் அல்லது சூலூர் மன்னவன், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் தொகுதிகளுக்கான மாவட்டச்செயலாளராக கூடலூர் நகராட்சி தலைவரும் நகர செயலாளருமான அறிவரசு பெயரும் அடிபடுகிறது மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட இவரது பெயர் கடைசி வரை இருந்த நிலையில் வேட்பாளர் வாய்ப்பு நழுவி போனது. ஆனாலும் தொய்வின்றி பணிகளை ஆக்கபூர்வமாக செய்து முடிப்பது இவரது தனித்தன்மை.
மேலும் காரமடை முன்னாள் நகர செயலாளர் வெங்கடேஷ் 40 ஆண்டு காலமாக கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்துள்ளதாகவும், அனைத்து தேர்தல்களிலும் காரமடை நகர பகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளதை சுட்டி காட்டி தமக்கு மாவட்ட செயலாளர் வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உண்மையாய் உழைப்பேன் என வாய்ப்பு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மனுவாக கொடுத்துள்ளார். எனவே காரமடை வெங்கடேஷின் பெயரும் தலைமையின் பரிசீலனையில் உள்ளது.
இது தவிர மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா கல்யாணசுந்தரமும் மாவட்ட செயலாளர் வாய்ப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை வடக்கு, கோவை தெற்கு தொகுதிகளுக்கான மாவட்டச்செயலாளராக தற்போதைய மாவட்டச் செயலாளர் துரை செந்தமிழ்செல்வன் அல்லது டாக்டர் கோகுல் இவர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான தி.மு.கவினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
எந்த நேரத்திலும் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் அறிவிப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பில் உடன்ப்பிறப்புகள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
