‘கட்சியில் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அநாகரீகமாக பேசும் நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செய்தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகமாக பேச தொடங்கியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, நடிகை திரிஷா குறித்து, அநாகரிமாகப் பேசினார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ( ஆகஸ்ட் 15ம் தேதி)தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகமுதல்வர் திரு .ஜோசப்விஜய் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்துடன், “சட்டமன்றத்தில் போய் அப்பா எங்கே என்று தேடுகிறார். வீட்டில் போய், அம்மாவிடம் கேட்டால் தான், அப்பா யார் என்று சொல்வார்” என்று, மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார்.”
நயினார்நாகேந்திரன் மாநிலத் தலைவரான பிறகு, தமிழகத்தில் பாஜக இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. பாஜகவுக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள் இன்று வெளியேறி விட்டனர். பாஜக எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் 10, 20 பேருக்கு மேல் வருவதில்லை. பல லட்சங்கள் செலவு செய்தாலும் தற்போது 500 பேரை ஒன்றாக சேர்க்க முடியவில்லை.
இப்படி மோசமாக பாஜக இருக்கும் நிலையில், தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக, ஆபாச பேச்சாளராக, அநாகரிக பேச்சாளராக மாறியிருக்கிறார் நயினார் நாகேந்திரன்பாஜக கட்சியின் வளர்ச்சியில், கட்சி நிர்வாகிகளின் கட்டமைப்பில்,மக்கள் நலன் காக்கும் போராட்டங்களில் கவனம் செலுத்துவது என எந்தவித கட்சி பணிகளிலும் ஆர்வம் காட்டாமல், தமிழக பாஜகவின் குறைகளை சுட்டிக்காட்டும்,தட்டிக் கட்டும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிகார அரசியல் செய்து வருகிறார்.
பாஜகவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் லட்சியங்களையும் தாண்டி வரும் புனிதமான ஒரே நாடு பத்திரிகை விழாவில், தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்களின் தாய், தந்தையரையும் ஆபாசமாக பேசி அரசியல் ஆதாயம் தேடியதன் மூலம் தமிழக பாஜகவிற்கு வரலாற்றில் கறை படிந்த அத்தியாயத்தை உருவாக்கி விட்டார்.
தமிழக மக்கள் நைனார் நாகேந்திரனுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். எதிர்காலத்தில் தமிழக அரசியலில் தலைவர்களை, பெண்களை, அரசியல் தலைவர்களின் குடும்பங்களை அநாகரிகமாக ஆபாசமாக தனிப்பட்ட முறையில், அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசு காவல்துறை முன்னுதாரணமான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜகவின் தலைவர் என்ற போற்றத் தகுந்த பதவியில் இருந்து மிகப்பெரிய தவறு இழைத்து, பாஜக கட்சிக்கு மிகப்பெரிய களங்கத்தை உருவாக்கி விட்டார். தமிழக பாஜகவின் கண்ணியத்தையும், பெருமையும் குழி தோண்டி புதைத்து விட்டார்.
அதேபோன்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் திரு.பொன்னார், திரு.பி.ராஜா திருமதி.தமிழிசை சௌந்தரராஜன், திருமதி.வானதிசீனிவாசன் உள்ளிட்ட அனைவரும் நயினார் நாகேந்திரனின் அநாகரிகப் பேச்சுக்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் தமிழக பாஜகவின் பெருமையை காக்கும் வகையில் தமிழக மக்களால் ஜனநாயக முறைப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வரையும் தமிழக முதல்வரின் பெற்றோரை கொச்சைப்படுத்திய நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து தேசியத் தலைமை உடனடியாக நீக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
