தமிழகத்தில் அனைத்து குவாரிகளையும் அரசு நடத்தக் கோரிய வழக்கில் மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹோமர்லால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரி நடவடிக்கைகளையும் அரசு ஏற்று நடத்த வேண்டும். அவற்றை கண்காணிக்க உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
மேலும், குவாரிகளில் இருந்து கிடைக்கும் கனிமங்களை பொதுமக்களுக்கு உரிய விலையில் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக கடந்த ஜூன் 16-ஆம் தேதி அளித்த தனது மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிபதிகள், இந்த பிரச்சினை மிகவும் முக்கியமானது. மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது எனக் கூறி தமிழக அரசின் இயற்கை வளத்துறை செயலாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்.6 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
வருமானமுள்ள டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்தும் போது, ‘வளமான’ வருமானமுள்ள குவாரிகளை தமிழக அரசே நடத்தினால், பட்ஜெட்டில் ‘துண்டு’ விழாதே என்கிறார்கள் தமிழக நிதிநிலைமையை நன்கு அறிந்தவர்கள்!
