காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சிவகுமார், அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது; கடந்தாண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்திற்கு நாங்கள் ஏற்கனவே வழங்கிய தண்ணீர் கடலில் தான் கலந்திருக்கிறது. 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 400 டிஎம்சிக்கு மேலாக தண்ணீர் வழங்கியுள்ளோம். மழையின்றி கடுமையான சூழலில் இருக்கும் போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வேதனையளிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, கபினி அணையில் 83 சதவீதமும், கேஆர்எஸ் அணையில் 36 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். கர்நாடகா நலன்களை பாதுகாக்க அனைவரும் ஒருமித்த முடிவில் இருக்கிறோம். நாளை நலத்திட்ட உதவிகளை துவக்கி வைப்பதற்காக கர்நாடகாவிற்கு வரும் பிரதமர் மோடியிடம், இந்த விவகாரம் குறித்து முறையிட உள்ளோம்.
தமிழக முதல்வர் விஜயுடன் பேசினேன். தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வருவதாகக் கூறினார். இன்னும் உறுதியாகவில்லை. முதல்வர் விஜய்யும், நானும் அவரவர் மாநில நலன்களில் அக்கறை கொண்டுள்ளோம். இருமாநில தலைமை செயலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறந்து விட முடியாத சூழலில் இருக்கிறோம். வேண்டுமானால் மத்திய அரசும், தமிழக அரசு அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம். இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படாதவாறு தீர்வை ஏற்படுத்த முயற்சிப்போம். நாளை மறுநாள் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.
மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு பலன் அளிக்கும். ஏனெனில், வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க முடியும். மேகதாது அணை கர்நாடகாவிற்கு மின்சார உற்பத்திக்கு மட்டுமே பலன் கொடுக்கும். ஆக.,3 ம் தேதி கன்னட அமைப்பினர் முழு கடையடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும். பதற்றமான சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வரும் போது, போராட்டம் நடத்தினால் எப்படி சமாளிக்க முடியும்? எங்கள் மாநிலத்திற்கு விருந்தினராக வருபவர்களுக்கு எந்த பிரச்னையும் வந்து விடக் கூடாது. எனவே, சிறிது காலம் காத்திருக்கலாம். சூழ்நிலை சீரான உடன் வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் என்று முதல்வர் விஜய்க்கு கோரிக்கையை வைக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.
