‘தூத்துக்குடி மாவட்டத்தை ‘கூறுபோட்டு’ கொள்ளையடித்து வருகின்றனர் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன்’ என பகீரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் த.வெ.க. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்!
திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகின்றன. தமிழக அரசியல் சூழல் அப்படியே மாறியுள்ளது. திமுகவும், அதிமுகவும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் ரௌடிசம் செய்வதாகவும், இப்போது வரை தொழில் நிறுவனங்களிடம் வசூலிப்பதாகவும் நிர்மல்குமார் பரபரப்பு குற்றத்தை வைத்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், ‘‘தூத்துக்குடியில் திமுக, அதிமுக என எந்த கட்சி வந்தாலும் மக்களுக்கு தொந்தரவு தான். திமுக ஆட்சிக்கு வந்தால் கீதா ஜீவன், அனிதா கிருஷ்ணனும் பங்கு பிரிச்சு மக்களிடம் கொள்ளையடிக்கும் வேலையை பார்ப்பார்கள். அந்த பக்கம் குவாரி அண்ணனுக்கு, இந்த பக்கம் குவாரி அக்காவுக்கு என பிரிப்பார்கள். அதிமுகவிலும் இப்படி சில நிர்வாகிகள் உள்ளனர்.
தவெக ஆட்சியில் தூத்துக்குடியில் 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். சத்தமில்லாமல் வளர்ச்சி பணி நடந்து கொண்டிருக்கிறது. நிர்வாகிகள் அனைவரும் மக்கள் நல திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பணியாற்றுகிறார்கள். மக்கள் விரும்ப கூடிய முதலமைச்சராக உள்ளார். மற்ற கட்சிகளாக இருந்தால் ஆட்சிக்கு வந்த முதல் 2 மாதங்களில் இருப்பதையெல்லாம் எங்கு வைத்து பங்கு பிரிப்பது, எங்கு வசூல் செய்வது என்பதைத்தான் யோசிப்பார்கள். ஒரு துறை விடமாட்டார்கள். இவர்கள் செய்யாத தொழில் இல்லை.
தூத்துக்குடியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. எல்லா நிறுவனங்களிலும் திமுக குறிப்பிட்ட தொகை இப்போதும் வசூலித்து கொண்டிருக்கிறார்கள். காற்றாலை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் கீதா ஜீவனுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. இது தூத்துக்குடியில் எழுதப்படாத விதியாக உள்ளது. இனிமேல் இது அனைத்தும் மாறும்.
தூத்துக்குடியை சுற்றி 70க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளன. அதில் பெரும்பாலானவை சட்டவிரோதமானவை. இவற்றை நிறுத்த வேண்டும். கல் குவாரிகளிலும் இன்னும் கொள்ளையடிக்கிறார்கள். இன்னும் எத்தனை சொத்து வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான லாரியில் கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளையை முதலமைச்சர் விஜய் தடுத்துள்ளார். இப்படி ஒரு ஆட்சி வேர வேண்டுமென மக்கள் நினைத்தார்கள். அதைத்தான் விஜய் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். தூத்துக்குடியில் கடந்த 25 வருடங்களாக அனிதா ராதாகிருஷ்ணன் என்ன செய்தார். தான் சாதாரண ஒரு வியாபாரி என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகிறார். சாதாரண வியாபாரிக்கு இன்றைக்கு இத்தனை குவாரி, கோடிக்கணக்கான சொத்து எப்படி வந்தது. மக்களுக்கு என்ன செய்தீர்கள்.
அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் ரௌடிசம் செய்து வருகிறார்கள். கருணாநிதி திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொண்டபோது அவரால் நடக்க முடியவில்லை. அவரை பெரியசாமி தூக்கி சென்றதால் இவர்கள் முரட்டு பக்தர்களாம். இதற்காக மாவட்டத்தையே அவருக்கு தாரை வார்த்தனர். ஒரு பக்கம் அண்ணன், மறுபக்கம் தங்கை இணைந்து இந்த மொத்த மாவட்டத்தையும் கொள்டிளையடித்துள்ளனர்’’என்றார்.
