தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது, மாறாக டெல்லி செல்லவேண்டும் என மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டி.டி.வி. ஆகியோர் வலியுறுத்தி வந்தனர்.
முதல்வர் விஜய் கர்நாடக செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவருடன் 3 அமைச்சர்கள், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் செல்வது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஜூன் 12ஆம் தேதியே திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாததால், விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். காவிரி மேலாண்மை ஆணையம் தரப்பில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி உத்தரவிட்டும் கூட, கர்நாடகா இதுவரை தண்ணீர் திறக்க முடியாது என்று பிடிவாதம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் விவசாயிகள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் விஜய் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி தண்ணீர் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைச் செயலர், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளார். இதனை கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் உறுதி செய்திருக்கிறார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விஜய் கர்நாடகா செல்லக் கூடாது என்று ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், பெ.சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்டோர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் விஜய்யுடன் 13 பேர் கொண்ட குழு பயணிக்க இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தமாக 3 அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் பயணிக்க உள்ளனர். அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் பயணிக்கிறார்கள்.
அதேபோல் தலைமைச் செயலர் சாய்குமார், முதல்வர் 2 தனிச் செயலாளர்கள், அட்வகேட் ஜெனரல், முதல்வர் விஜய்யின் சிறப்பு ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி, நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சத்ய பிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோர் கர்நாடகா செல்கின்றனர். கர்நாடகா சட்டசபை வளாகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்ட சூழலில், மீண்டும் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது சரியா என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒவ்வொரு முறையும் பிரச்சனை முடிவுக்கு வராததாலேயே, தமிழக அரசு உச்சநீதிமன்றம் மூலமாக உரிமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
