பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் உதயநிதி தலைமையில் நடக்கியது.

2026-27ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (6ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்ட தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எந்த பிரச்னைகளை முன்னெடுக்க வேண்டும். விவாதத்தின் போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். இதற்காக, திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

இதுதொடர்பாக திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்பு: ‘‘எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 28ம் தேதி(இன்று) மாலை 5 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிதிநிலை அறிக்கை பொருள் குறித்து கூட்டம் நடைபெறும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்றைய தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, லஞ்சமற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சிறப்பு தணிக்கை அறிக்கை ஒன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதிமுறைகேடுகள் மற்றும் ஊழல் பட்டியல்கள் அந்த அறிக்கையில் விரிவாக இடம்பெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, நிதியமைச்சர் தயாரிக்கும் இந்த ஊழல் பட்டியலில் முன்னாள்கள் மட்டுமன்றி, அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளின் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் பல்வேறு சமூக அமைப்புகளிடம் இருந்தும் வலுத்து வருவதாக கூறப்படுகிறது..

ஏனென்றால், கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர் சோதனைகளும் வழக்குகளும் பாய்ந்தபோதிலும், இறுதியில் கைது நடவடிக்கைகளோ தண்டனைகளோ உறுதியாக வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் இன்னமும் நீடிக்கிறது. அரசியல் திரைமறைவு உடன்பாடுகளால் அத்தகைய நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாக சலசலக்கப்பட்ட நிலையில், தவெக அரசு அந்தத் தவறை செய்யக் கூடாது என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறதாம்.

இப்படியான பரபரப்புக்கு நடுவில்தான், திமுகவின் இன்றைய காணொலி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் அரசின் நகர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, தணிக்கை அறிக்கைக்கு என்ன மாதிரியான பதிலடிகளைக் கொடுப்பது மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது எப்படி என்பதை நோக்கமாகக் கொண்டு திமுக தனது நகர்வுகளைத் திட்டமிட்டு வருகிறது. விவாதத்தின்போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார்.

தவிர, முதல்வர் விஜய்க்கு எந்தெந்த விதத்தில் ‘ஷாக்’ கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்க இருக்கிறதாம். எனவே, பட்ஜெட் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal