பிரபல நடிகர் தனுஷ், தனது ரசிகர்களை ‘‘நலத்திட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்’’ என்று கேட்டு கொண்டதன் மூலம் அரசியலில் களமிறங்குவது குறித்த யூகங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார்.

கடந்த 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெற்ற இரத்ததான முகாமில் பேசிய தனுஷ், ‘‘ரசிகர்கள் வெறும் சினிமா கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், தங்களை சுற்றியுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சமூக சேவைகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். ரசிகர்களின் இந்த ஒற்றுமைக்கு சரியான வடிவம் கொடுக்க வேண்டும் என்றும், மக்கள் சேவைக்காக அதனை பயன்படுத்த வேண்டும்’’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

தளபதி விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு இறுதியில் தவெக கட்சியை தொடங்கியதை போல, தனுஷும் அரசியலுக்கு வர தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தும் கேள்வி எழுப்பியும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தேசிய விருதுகள் குறித்து பேசிய தனுஷ், தனது ‘ராயன்’ திரைப்படத்தை விட சிறந்த தமிழ்ப் படங்கள் அந்த ஆண்டில் வெளிவந்திருக்கலாம் என்று தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்தார். இருப்பினும், ஒரே ஆண்டில் ஒரு தமிழ் நடிகர் இரண்டு தேசிய விருதுகளை வென்ற பெருமையை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மாமனாரால் (ரஜினி) சாதிக்க முடியாததை மருமகன் (தனுஷ்) சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal