சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நசீர் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வரும் நசீர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்து வருகிறது.

மேலும், டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆஸ்மி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள ஆஸ்மி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை இந்த 2 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்.

புதுக்கோட்டையில் தொழிலதிபர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் திமுக நிர்வாகி செல்லையாவின் மகன் திருக்குமரன். இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அதேபோன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், இவரது வீட்டில் ஏழு பேர் கொண்ட இரண்டு அமலாக்கத்துறை குழுக்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று கோட்டைப்பட்டினம் பயாஸ் என்பவர் திருச்சியில் டிராவல்ஸ் ஏஜென்சியை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோன்று புதுக்கோட்டை பெருங்களூர் சேர்ந்த பாக்யராஜ். இவர் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.மூன்று இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் உதவியோடு அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal