குதிரை பேரம் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவில், காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், செந்தில்பாலாஜியும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், இருவரின் முன் ஜாமீன் வழக்குகளில் எதிர்த்து வாதிடுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், வழக்கில் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்க வேண்டுமென சென்னை காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘ செந்தில் பாலாஜி தலைமறைவு ஆகமாட்டார். விசாரணை முழு ஒத்துழைப்பு கொடுப்பார்’ என்று அவரது தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘இருவரும் காலை மற்றும் மாலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பு செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என் தீவிர முனைப்பில் காவல்துறை செயல்பட்டு வந்தது. ஆனால், அந்த கைதிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை போட்டிருக்கிறது.
