கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை ‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி’யாக நியமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இந்த நிலையில்தான், ‘‘ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆவர். அரசில் அவர்கள் என்ன அதிகாரப்பூர்வப் பதவிகளை வகிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இருப்பினும், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறைக்கு அருகிலேயே இவர்களுக்கெனத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசு ஊழியர்கள் அல்லாத பட்சத்தில், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் எந்த அடிப்படையில் அவர்கள் பங்கேற்கிறார்கள்’’ என்று திமுக எம்பி வில்சன் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக எம்பி வில்சன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘‘முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பிற உயர்மட்ட அரசு ஆலோசனைகளில் திரு. ஜான் ஆரோக்கியசாமி மற்றும் திரு. விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பது குறித்துக் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆவர். அரசில் அவர்கள் என்ன அதிகாரப்பூர்வப் பதவிகளை வகிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இருப்பினும், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறைக்கு அருகிலேயே இவர்களுக்கெனத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அரசு ஊழியர்கள் அல்லாத பட்சத்தில், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் எந்த அடிப்படையில் அவர்கள் பங்கேற்கிறார்கள்? மாண்புமிகு முதல்வர் ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்றுள்ளார். இத்தகைய நபர்களை இக்கூட்டங்களில் ஈடுபடுத்துவது, அரசியலமைப்பு நெறிமுறைகள், அரசு நிர்வாக நடைமுறைகள் (Rules of Business) மற்றும் அவரது ரகசியக் காப்பு உறுதிமொழி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது குறித்த தீவிரமான கவலைகளை எழுப்புகிறது.
இந்த இரு நபர்களின் அதிகாரப்பூர்வப் பதவிகள் என்ன என்பதை மாண்புமிகு முதல்வர் வெளிப்படுத்த வேண்டும்; அத்துடன், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்பதையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்!’’ வில்சன் எம்.பி., கேள்வி எழுப்பி உள்ளார்.
