நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது பிறந்தநாளை நேற்று முன்தினம் (ஜூன் 22) கொண்டாடினார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
அக்கட்சியினர் சார்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தவெகவினர் வழங்கினர். ரத்த தானம், அன்னதானம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல்வரின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், திரைத் துறையில் நடிகராக இருந்து, இன்று முதல்வர் ஆகியுள்ள முதல்வர் விஜய்க்கு, அவரது பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் த்ரிஷா. இது இப்போது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
இதற்கிடையே, அந்தப் புகைப்படத்தில் த்ரிஷாவின் பகிர்ந்துள்ள விஷயங்கள் இப்போது வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. தனது பதிவில் த்ரிஷா குறிப்பிட்டுள்ள நம்பர் 00.00. பலரும் இது நள்ளிரவு 12 மணி நேரம் என நம்பி வரும் நிலையில் வலைதளவாசிகள் அப்படி இல்லை என்கின்றனர்.
“00.00” என்பது பொதுவாக பல காதல் ஜோடிகள் பயன்படுத்தும் ஒரு குறியீடு. கடிகாரத்தில் நாள் மாறுவது போல, காதலர்கள் தங்கள் கடந்த காலப் பிரச்சினைகளை மறந்து, உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதைக் குறிக்கிறது. ‘0’ என்ற வட்டம் முடிவில்லாமல் தொடர்வது போல, அவர்களின் காதலும் பிரியாமல் என்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
மேலும், சில ஜோடிகள் தாங்கள் முதன்முதலில் பேசிய நேரம், சந்தித்த நாள் அல்லது காதலைத் தொடங்கிய நினைவாகவும் “00.00” என்ற எண்ணை பயன்படுத்துவார்கள் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
