நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தமிழக வெற்றிக் கழகம். ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகள் கிடைக்காவிட்டாலும், 108 (இரண்டு தொகுதிகளில் விஜய் வெற்றி) தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியைப் பிடித்தது வரலாற்றை தகர்த்தெறிந்து உடைத்திருக்கிறது. அதாவது, பணப்பட்டுவடாவுக்கு முற்றுப்பள்ளி… கட்டமைப்பு இல்லாமலேயே வெற்றி… என கருத்துக்கணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது.
ஆனாலும், ஒரு கட்சி வலுவாக இருக்கவேண்டும் என்றால், கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை அக்கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருக்கவேண்டும். அதற்கு உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதுதான் உண்மையும், நிதர்சனமும் கூட. தற்போது அந்தப் பணிகளில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை களத்தில் இறக்கியிருக்கிறார் விஜய்!

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசியபோது, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் மகுடம் சூட தவெக அதிரடி வியூகம் வகுத்து வருகிறது. அதற்கேற்ப, மற்ற கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களைத் தன் பக்கம் இழுக்க ‘வலை’ வீசி வருகிறது. பெரும்பாலும் இந்த வலையில் அதிமுகவினர்தான் சிக்கி வருகின்றனர்.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆளும் தரப்பின் அசுர வளர்ச்சியைக் கண்டு அதிமுக, திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகளிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள்மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என முக்கியப் புள்ளிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெக நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், ஏற்கெனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர். சிவபதி உள்ளிடோர் தவெகவில் இணைந்தனர். நேற்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா, முன்னாள் எம்.பி. வனரோஜா, முன்னாள் நெல்லை மேயர் புவனேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தவெகவில் இணைந்தனர்.
இந்தத் திடீர் அணித் தாவல்கள், தமிழகத்தின் பாரம்பரியக் கட்சிகளின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்துள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தாலும், அடுத்ததாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ‘தனிப் பெரும்பான்மை’ பலத்துடன் வெற்றிக்கொடியை நாட்ட வேண்டும் என்பதில் தவெக தலைமை உறுதியாக உள்ளது. இதற்காக இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள தவெக, மற்ற கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களைத் தன் பக்கம் இழுக்க ‘வலை’ வீசி வருகிறது. பெரும்பாலும் இந்த வலையில் அதிமுகவினர்தான் சிக்கி வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மற்ற கட்சிகளின் அதிருப்தி நிர்வாகிகளைக் குறிவைத்து ‘ரகசிய ஆபரேஷன்’ தீவிரமடைந்துள்ளது. அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள உள்ளூர் செல்வாக்கு மிக்க நபர்களை வளைப்பதன் மூலம், தேர்தலை மிக எளிதாக எதிர்கொள்ள முடியும் என தவெக வியூகம் வகுத்துள்ளது.
அந்தவகையில், பல முன்னணித்தலைவர்களுடன் ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. பனையூரில் இதுதொடர்பான நடவடிக்கைகளில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.
நகரப் பகுதிகளைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் முற்றிலும் மாறுபட்ட ஒரு உத்தியைத் தவெக கையில் எடுத்துள்ளது. அங்கு கொள்கைகளை விட மக்களின் அன்றாடத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றில் நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்டி, ‘சமூகத் தணிக்கை’ என்ற பெயரில் களப்பணியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி நகர்வுகள் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களைச் சொந்த பலத்தில் கைப்பற்றி, தவெக ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை மீண்டும் நிரூபிக்க அக்கட்சித்தலைமை மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது’’ என்றனர்.
இதுகுறித்து தவெக வட்டாரத்தில் விசாரித்த போது, “அதிகாரத்தின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றினால் மட்டுமே, மாநில அளவிலான இலக்கை நோக்கிய பயணத்தைச் செம்மையாக முன்னெடுக்க முடியும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மக்கள் செல்வாக்கு மிக்க, நன்கு அறிமுகமான நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பிற கட்சிகளில் உள்ள முக்கியப் புள்ளிகள் மற்றும் தேர்தல் பணிகளில் அனுபவம் வாய்ந்த அதிருப்தி நிர்வாகிகள், உள்ளூர் செல்வாக்கு மிக்க நபர்களை தவெக பக்கம் ஈர்க்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. கிராமப்புறங்களில் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு நூலிழையில் வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் கட்சிகளால் ஓரம் கட்டப்பட்ட நிர்வாகிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. தவிர வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்குள் அ.தி.மு.க. முற்றிலுமா கரைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் த.வெ.க. கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதால், தி.மு.க.வும் கரைசேர வாய்ப்பில்லை’’ என்றனர்.
