வருகிற ஜூன் 8ம் தேதி நடக்கும் ‘இண்டியா கூட்டணி’ தலைவர்கள் சந்திப்பு நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்-யை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லியில் சந்திக்க உள்ளனர். அடுத்த வாரம் 8ம் தேதி (திங்கட்கிழமை) தலைநகர் டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது பாஜகவை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெக தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அடுத்த வாரம் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் தவெக தலைவரும், தமிழக முதல்- அமைச்சருமான விஜய்யை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்தான் இன்றைய தினம் (2ம் தேதி) காலை முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பத்து நிமிடங்கள் பேசியிருக்கிறார். அப்போது, ‘இண்டியா கூட்டணி’ தலைவர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறாராம்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விஜய் கலந்து கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பதையும் ப.சிதம்பரம் விஜய்யிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal