நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாங்கள் ஒத்திவைக்கும் தீர்ப்புகளை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பக்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தீர்ப்புகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் வழக்காடுபவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அனைத்து உயர் நீதிமன்றங்களும் தீர்ப்புகளை ஒத்திவைத்த மூன்று மாதங்களுக்குள் அவற்றை வெளியிட வேண்டும்.

தனிநபர் சுதந்திரம் தொடர்பான வழக்குகளில் விரைவான தீர்ப்புகள் தேவை. ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவுகள் அதே நாளில் வெளியிடப்பட வேண்டும். ஒருவேளை ஒத்திவைக்கப்பட்டால் அடுத்த நாளே வெளியிடப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். ஜாமீன் அல்லது தண்டனை தொடர்பான உத்தரவுகள் வெளியிட்ட உடனேயே சிறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

விசாரணைக் கைதி அல்லது தண்டனை பெற்றவர் அதே நாளில் அல்லது அதிகபட்சமாக அடுத்த நாளுக்குள் விடுவிக்கப்பட வேண்டும். தீர்ப்பின் முக்கிய பகுதி மட்டுமே வெளியிடப்பட்டால் அதற்கான முழுமையான காரணங்களுடன் கூடிய தீர்ப்பு 15 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

தீர்ப்பை ஒத்திவைத்த நான்கு மாதங்களுக்குள் அது வெளியிடப்படாவிட்டால் வழக்காடுபவர்கள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அணுகி, அந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றக் கோரலாம். காரணங்களுடன் கூடிய முழுமையான தீர்ப்பு நீதிமன்றத்தில் வெளியிடப்படும்போது அந்த தீர்ப்பு 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்கள் எந்தவொரு குறிப்பிட்ட நீதிபதி மீதோ, உயர் நீதிமன்றத் தீர்ப்பு மீதோ அவதூறு சுமத்தும் நோக்கம் கொண்டவை அல்ல’ என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal