டெண்டரில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் டெண்டர் வெளியிடும் அனைத்து அமைப்புகளும் ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டம் மற்றும் விதிகளை முறையாக பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து திமுக- அதிமுகவை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு. கடந்த ஆட்சி காலத்தில் இல்லாத வகையில் புதிய, புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எந்தவித முறைகேடும் இந்த ஆட்சியில் நடைபெறக்கூடாது என ஒப்பந்தங்கள் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி வருகிறார். அதற்கு ஏற்ப கடந்த திமுக ஆட்சியில் மின் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்டவற்றில் போடப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டென்டர்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி, நகர் நிர்வாக இயக்குனரகம் மற்றும் பேரூராட்சி இயக்குனரகத்திற்கு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்படுள்ள சுற்றறிக்கையில், ‘‘ தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் வெளியிடப்படும் டெண்டர் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் டெண்டர் அறிவித்த நாளிலிருந்து இணையதளத்தில் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யார் யார் டென்டரில் கலந்து கொண்டார்கள் என்பது போன்ற விவரங்களையும், குறைவான ஒப்பந்தபெள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டால் அது தொடர்பான விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘‘நகராட்சி நிர்வாகம் சார்பில் திட்ட அனுமதிக்கு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் டெண்டரில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் டெண்டர் வெளியிடும் அனைத்து அமைப்புகளும் ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டம் மற்றும் விதிகளை முறையாக பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

டெண்டர் சமர்ப்பிக்கும் நிறுவனங்களிடமிருந்து கள ஆய்வு சான்று மற்றும் உபகரணங்கள் சான்று பெற தேவையில்லையெனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்வைப்புத் தொகை, பாதுகாப்பு தொகை உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் மூலம் தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்டட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்து தாமதம் இன்றி கட்டட அனுமதியை வழங்க வேண்டும்’’ என அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal