தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, ஆட்சியைப் பிடித்த விஜய், முதல்வராக பதவியேற்ற போது தமிழகம் கடனில் தத்தளிக்கிறது என்று பேசியதை தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
அதே போல், ஆட்சி மாற்றம் வரும்போதெல்லாம் ‘வெள்ளை அறிக்கை’ என்பது சம்பிரதாயம் என்பதை அறிந்தும், விஜய்யும் அதே சம்பிரதாய அரசியலை அறங்கேற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,
‘‘இந்தியாவின் கடன் தொகை சுமார் 200-லட்சம் கோடிகள்… தமிழகத்தின் கடன் சுமார் 10-லட்சம் கோடிகள்…
எந்த ஒரு நாடும் அல்லது மாநிலமும் அதன் வளர்ச்சிகாக கடன் வாங்குவது இயல்பு தான்…
இன்னும் சொல்லப்போனால் உலக வல்லரசாக இருக்கிற அமெரிக்கா தான் உலகிலேயே அதிகம் கடன் வைத்திருக்கும் நாடாகும்…
ஒரு நாடோ அல்லது மாநிலமோ அதன் வளர்ச்சிக்கும் உட்கட்டமைப்புக்கும் வாங்குகிற கடன் மூலதனச் செலவாகவே கருதப்படும்…
உதாரணத்துக்கு…
ஒரு குடும்பம் நிலம் வாங்கவோ அல்லது தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவோ அல்லது தொழில் அபிவிருத்திக்காகவோ வாங்குகிற கடன் மூலதனச் செலவாகி எதிர்காலத்தில் அது சொத்தாக உருவெடுக்கும்….
இது குடும்பங்களுக்கு மட்டுமல்ல… 8-கோடி மக்களைக் கொண்ட தமிழகத்துக்கும் சரி… 130-கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டுக்குமே பொருந்துகிற தத்துவமாகும்…
அந்த வகையில் தான் எடப்பாடி இருந்த காலம் வரையிலான கடனும் சரி… அதன் பிறகு வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காலம் வரையிலான கடனும் சரி…
மத்திய ரிசர்வங்கி நிர்ணயம் செய்துள்ள அளவுக்கு உட்பட்ட கடன் அளவாகவே இருக்கிறது…
அந்த கடன் தொகைகளின் துணையும் சேர்ந்து தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வி சுகாதாரம் தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேறிய மாநிலம் என்கிற சரித்திர சாதனையை நிகழ்த்தியிருக்கிறது…
இந்த அத்தனை விபரங்களையும் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்… முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரை பல முறை சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்…
ஆனால் இவை அனைத்தையும் தெரிந்து கொண்டே 6 -சிலிண்டர் தருவேன்… மகளிர் உரிமைத் தொகையை -2500 ஆக உயர்த்தித் தருவேன்… வேலையில்லாமல் இருப்பவர்கள் தொடர்ந்து வேலைக்கே செல்ல வேண்டாம் என்கிற மனநிலைக்கு ஆளாகும் வகையில் மாதம் -4000 தருவேன்…
தங்க மோதிரம் போடுவேன் தாய்மாமன் சீர் தருவேன்… என்றெல்லாம் ஆட்சியை பிடிப்பதற்காக எல்லையில்லாது ஏகத்துக்கும் அள்ளிவிட்ட பக்கா மாஸ் முதல்வர் இப்போது முதல்வர் இருக்கையில் உட்கார்ந்த உடனே மாநிலத்தின் கடன் தொகையை காரணங் காட்டி பல்டி அடிக்கிறார்…
வெள்ளை அறிக்கை என வியாக்யானம் பேசுகிறார்…
அதுசரி 5000 கோடி அளவுக்கு சொத்து வச்சிருக்கும் இந்த கேரியர் உச்சம் தானே தன்னோட அப்பா அம்மாவுக்கே கடன் கொடுத்திருப்பதாக தேர்தல் அஃபிடவிட்ல கதை சொன்னவர்…
இப்ப ஒருவழியாக திமுக கூட்டணி கட்சிகளின் கருணையில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த வேகத்தில் அதே கடனை வைத்து கதை அளக்க தொடங்கியிருக்கிறார்…
இருக்காதா பின்ன கதையும் நடிப்பும் தானே அவரது வாழ்நாள் மூலதனம்… அதனால இனி நித்தம் நித்தம் கதையும் கேட்கலாம் “கோட்” முதல்வரது நடிப்பையும் பார்க்கலாம்..!
