2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுக இரண்டாக உடையும் சூழல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்று சட்டசபையில் அரங்கேறி இருக்கிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களிலும், அதிமுக வெறும் 47 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, டெபாசிட் கூட இழந்தது கட்சித் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள் என தொடர்ந்து 11 தொடர் தோல்விகளால் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் கட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியின் எதிர்காலம் குறித்து அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை தற்போது கட்சிக்குள் வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கேற்கலாம் என்ற யோசனையும் அதிமுகவுக்குள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு ஆதரவு தனக்கு இருப்பதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என உறுதி செய்திருக்கும் சண்முகம், எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டசபை குழு தலைவராக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சட்டசபைக்கு எடப்பாடி தலைமையில் கேபி முனுசாமி உள்ளிட்ட சிலர் வந்தனர். சிறிது நேரம் கழித்து சி.வி சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வந்தனர். வழக்கமாக எடப்பாடி பழனிச்சாமி வரும்போதுதான் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் அவர் தலைமையில் வருவார்கள். ஆனால் எடப்பாடி ஒரு டீம் ஆகவும், சிவி சண்முகம் ஒரு டீம் ஆகவும் சட்டசபைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பது உறுதி தான் என்கின்றனர். மேலும் இன்றைய கூட்டத்தொடரிலேயே சிவி சண்முகம் எடப்பாடிக்கு எதிராக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
