அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை குறைக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், ‘‘அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குபதிவை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது. சில மாவட்டங்களில் இந்த சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி நடப்பதாக தெரிகிறது. இதன் மூலம் வாக்குசாவடி கைப்பற்றல் கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட தவறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் குறையாத வண்ணம் அதிரடி ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal