சமீபத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வின் சீனியர் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான, ஓ.பி.ரவீந்திரநாத்தும் இணைந்தார். இணையும்போதே தி.மு.க.வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தரும் உத்தரவாதத்தை தி.மு.க.விடம் பெற்றுக்கொண்டுதான் இணைந்தாராம் ஓ.பி.எஸ்..

‘‘ மூன்றுமுறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு போடி தொகுதி, வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாடு தொகுதி, ஐயப்பனுக்கு உசிலம்பட்டி தொகுதி என மூன்று தொகுதிகள் தருவதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

ஆனால், இந்த இணைப்புகளுக்கெல்லாம் மூல காரணமாக இருந்தது அன்வர் ராஜா, வ.மைத்ரேயன், மருது அழகுராஜ் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர்தான். அதிலும் குறிப்பாக ‘இனி அண்ணா தி.மு.க. கிடையாது… அண்ணா தொடங்கிய தி.மு.க.தான்… எம்.ஜி.ஆரை அரசியலில் வளர்ந்த தாய் வீடே தி.மு.க.தான்!

1972ல் எம்.ஜி.ஆர். கலைஞரை விட்டு பிரிந்தபோதே தி.மு.க.வில் ஏற்பட்ட அந்த பிளவை சரிப்படுத்த பிஜு பட்நாயக், பரூக் மரக்காயர் போன்ற தலைவர்கள் முன்னெடுத்த நல்லெண்ண முயற்சிகள் அன்றைக்கு கைகூடாமல் போனாலும், இன்று திராவிட இயக்கமே ஒன்றாகும் நல்ல சூழலை எடப்பாடி பழனிசாமிதான் ஏற்படுத்தியிருக்கிறார்.

அன்வர் ராஜா

எனவே, தி.மு.க.வில் அனைவரும் இணையவேண்டும்… திராவிட இயக்கத்திற்கு எதிரான சித்தாந்த யுத்தத்தை பாரதீய ஜனதா கட்சி வெறித்தனமாக தமிழ்நாட்டில் முன்னெடுத்து வருவதை நாம் அனைரும் ஒன்றுகூடி முறியடிக்க வேண்டும்’ என ஒரு புதிய விவாதத்தை அரசியல் களத்தில் உருவாக்கியவர் மருது அழகுராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

மருது அழகுராஜ்

எனவே, மருது அழகுராஜுக்கு நிச்சயம் ஒரு தொகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்ற கருத்தும் அறிவாலயத்தின் பக்கம் அலையடிக்கிறது. அதே வேளையில் அ.தி.மு.க.விலிருந்து இப்படி வந்தவர்களுக்கெல்லாம் தொகுதிகளை அள்ளிக்கொடுத்தால், இதுகாலம் தி.மு.க.வை கட்டிக்காத்தவர்கள் என்ன செய்வது? என்கிற எதிர்ப்புக் குரல்களும் ஒருபக்கம் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனாலும், அ.தி.மு.க.விலிருந்து நம்பி வந்தவர்களை தி.மு.க. கைவிட்டதில்லை என்பதுதான் வரலாறு!’’ என்றவர்கள், ‘‘இதற்கு எ.வ.வேலு, முத்துசாமி, சேகர்பாபு, செந்தில் பாலாஜி, அணிதா ராதாகிருஷன், ரகுபதி, ராஜகண்ணப்பன்’’ என நீளும் பட்டியலையம் சுட்டிக்காட்டுகின்றனர் தி.மு.க.வை உற்று நோக்கும் அரசியல் ஆய்வாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal