தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் பா.ம.க. இணைய வாய்ப்பில்லை என்ற நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் ராமதாஸ் தரப்பு 5 சீட் கேட்டிருப்பதாகவும், சில டிமாண்ட்களை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் விசாரித்தபோது, ‘‘பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவும், அன்புமணி தலைமையில் ஒரு பிரிவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அன்புமணி தரப்பு பாமக, என்டிஏ கூட்டணியில் இணைந்துவிட்டது.

இதனால் ராமதாஸ் தரப்பு திமுகவுடன் இணைய ஆர்வம் காட்டி வந்தது. ஆனால் திருமாவளவன் எதிர்ப்பு காரணமாக, ராமதாஸை கூட்டணிக்குள் சேர்க்க திமுக தயங்கியது. தவிர, ஏற்கனவே, தி.மு.க.வில் தே.மு.தி.க. இணைந்து விட்டதால், ராமதாஸுக்கு வாய்ப்பில்லாமல்டி போனது.

இதனால் தவெக உடன் இணையலாமா என்று ராமதாஸ் தரப்பு ஆலோசித்து வருகிறது. இருந்தாலும் ஜூனியரான விஜய்யுடன் கைகோர்க்க ராமதாஸ் தயங்கி வருகிறார். இதனிடையே தங்கள் பக்கம் வரும் என்று காத்திருந்த தேமுதிக திடீரென திமுக பக்கம் சென்றது. இதனால் டெல்லி பாஜக தலைமையும் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறது. அதேபோல் வடமாவட்டங்களில் தேமுதிக மற்றும் விஜய் ஏற்படுத்தப் போகும் பாதிப்பை அன்புமணியும் உணர்ந்தே இருக்கிறார்.

இதனால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்புடன் பேசி வருகிறார். ராமதாஸ் தரப்பில் ஸ்ரீகாந்தி பேசி வருகிறார். அப்போது ராமதாஸ் & – அன்புமணி இடையில் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கி இருக்கிறது. அதேபோல் கூட்டணிக்குள் வந்தால், உங்களுக்கு தேவையானதை செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ராமதாஸ் தரப்பில், நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் மாம்பழம் சின்னத்தில் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட சம்மதிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீகாந்தி, ஜிகே மணி மற்றும் அருள் உள்ளிட்ட 5 பேருக்கு சீட் கொடுக்க வேண்டும். இதனை ஏற்றால், தொகுதி எண்ணிக்கை தொடர்பாக மேலும் பேசலாம் என்று ராமதாஸ் தரப்பு கூறிவிட்டது. அதேபோல் ராமதாஸ் நிபந்தனைகளை அன்புமணியும் ஏற்க சம்மதித்துவிட்டதாகவே தெரிகிறது. இதனால் கூடிய விரைவில் இணைப்பு நடக்கும்’’ என்றனர்.

அதாவது, ஐந்து சீட், மாம்பழம் சின்னம் என்ற இரண்டு டிமாண்டுகளையும் என்.டி.ஏ. கூட்டணி ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal