கரூர் சம்பவத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக சரிவை சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகப் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் சங்கீதா, நடிகை ஒருவருடன் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், விஜய் விவகாரத்து வழங்க மறுப்பதாகவும், தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான், சமீபத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் விஜயும் திரிஷாவும் இணைந்து பங்கேற்றது மேலும், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் தான், விஜய்க்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜூ விஜயின் விவாகரத்து வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெல்லும்; திமுகவின் சகாப்தம் முடியும். திமுக ஒரு மூழ்கும் கப்பல்’’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து விஜயின் விவாகரத்து விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தவெக தலைவர் விஜய்யின் இமேஜை கெடுப்பதற்காக திமுக பல வேலைகளை செய்துவருகிறது. இதேபோன்று அதிமுகவிற்கு எதிராகவும் திமுக பல வேலைகளை செய்ததது’’ எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
த.வெ.க. மீது அ.தி.மு.க.விற்கு வந்திருக்கும் ‘திடீர் பாசம்’ குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பிற்கு பிறகுதான் விஜய்க்கு ஆதரவாக செல்லூர் ராஜு பேசியிருக்கிறார். எடப்பாடியின் கண் அசைவின்றி செல்லூர் ராஜு பேசியிருக்கமாட்டார்.
குறிப்பாக கரூர் சம்பவத்திற்குப் பிறகு அரசியல் களத்தல் விஜய் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறார். கரூர் சம்பவத்தின் போது விஜய்க்கு அ.தி.மு.க. கொடுத்த ஆதரவை தி.மு.க. தலைமை ரசிக்கவில்லை. இதனை உணராத விஜய் அ.தி.மு.க.வை கடுமையாக சீண்டினார். இதனால், அ.தி.மு.க.வும், த.வெ.க.வை சீண்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.
தற்போது, தி.மு.க. கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. இதே நிலையில் தேர்தலை சந்தித்தால், கட்சி ஆரம்பித்த புதிதில் தே.மு.தி.க. வாங்கிய வாக்கு சதவீதங்களைக்கூட த.வெ.க.வால் பெற முடியாது. கரூர் சம்பவம், ஜனநாயகன் படம், திரிஷா விவகாரம்… விவகாரத்து கேட்கும் விஜய் மனைவி…. என அரசியல் சுழலிலும், குடும்ப சுழலிலும் சிக்கித் தவிக்கும் விஜய், தனித்துப் போட்டியிட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சினிமாவும், அரசியலும் அவரை விட்டு விலகிவிடும்!
பொதுக்கூட்ட மேடையில் தெளிவாக அரசியல் பேசும், விஜய்க்கு இந்த யாதார்த்தம் புரிந்ததா? அல்லது புரியாதது போல் ‘தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி’ என மீண்டும் பேசிவந்தால், 2026க்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிடும். எனவேதான், விஜய்க்கு நெருக்கமான ஒரு அரசியல் தலைவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான், த.வெ.க.வுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும். இல்லாவிட்டால் எதிர்காலம் இருக்காது என்று கூறியதால் விஜய் மாற்றியோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். இந்தப் பின்னணியில்தான் செல்லூர் ராஜுவும் விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கிறார்’’ என்றனர்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்…. நிரந்திர எதிரியும் இல்லை… நிரந்திர நண்பனும் இல்லை… ஓ.பி.எஸ்-. தி.மு.க.வில் இணைவார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா..?
