தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிவிடும் என்று தகவல்கள் கசிந்த நிலையில், 28 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா சீட்! ஒரு ராஜ்யசபா சீட் இப்போது, 2028ல் ஒரு ராஜ்யசபா சீட் என தொகுதி பங்கீடுகள் முடிவுக்கு வநதிருக்கிறது.
திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி நேற்று மாலையே உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருடனும் நேற்று மாலை கனிமொழி ஆலோசித்து தமிழக அரசியல் சூழலை கூறி இருக்கிறார். இதன்பின் இறுதியாக 28 சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா என்று கூட்டணி உறுதியாகி இருக்கிறது.
இது பற்றி அறிவாலயம் வட்டாரத்தில் பேசினோம். ‘‘திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. நேற்று முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை இருவரும் சந்தித்து ஆலோசித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி தரப்பில் 41 சீட் வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். அதற்கு ஸ்டாலின் தரப்பில் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா என்று பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி உடனான உறவுக்காக கூடுதலாக 2 அல்லது 3 இடங்கள் மட்டும்தான் என்றும் கூறியுள்ளார். அதற்கு ப.சிதம்பரம் தரப்பில் காங்கிரஸ் கட்சியின் தலைமை எதிர்பார்க்கிறது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின், அவர்களுக்கு நீங்கள் தான் புரிய வைக்க வேண்டும். கூட்டணி கட்சிகள் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு கொடுக்க வேண்டாமா? இங்கு என்ன நடக்கிறது என்பதை சொல்லுங்கள். இது நாம் அனைவருக்கும் முக்கியமான தேர்தல் என்று கூறியுள்ளார். இறுதியாக 28+1 என்ற ஆஃபரை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக உங்கள் தலைமையிடம் உடனடியாக பேசுங்கள்.. அதற்கு மேல் உங்கள் முடிவு என்று ஸ்டாலின் கூறிவிட்டு, மத்தியில் நமது ஒற்றுமை தொடரும்.. சித்தாந்த ரீதியாக ஒற்றுமை தொடரும் என்றும் உறுதி கொடுத்துள்ளார். அதன் பிறகு 2028ல் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.
இந்த சந்திப்புக்கு பின் ப.சிதம்பரம் உடனடியாக சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம் சூழலை விளக்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலினும் தங்கள் தரப்பில் கனிமொழி மூலமாக காய் நகர்த்தி இருக்கின்றனர். நேற்று மாலையே கனிமொழியும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் சூழலை விளக்கி இருக்கிறார்.
இறுதியாக ராகுல் காந்தி 28+2 என்ற கணக்கிற்கு உடன்பட்டுள்ளார். இதன்பின்னரே முதல்வர் ஸ்டாலின் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்று இருக்கிறார் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். இதனால் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி ஒப்பந்தம் மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும்’’ என்றனர்.
