சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் அமலாக்கத்துறையின் அதிரடி ஆரம்பமாகும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அப்துல் வஹாப் ஆடியோ வெளியாகி தி.மு.க. தலைமைக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் திமுகவைச் சேர்ந்த பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வஹாப் மீது சூழ்ந்து வருகின்றன. உள்கட்சி மோதல்கள், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் அதிகார தலையீடு, நெல்லை மாநகராட்சியில் மேயர் சரவணன் உட்பட பலருடன் மோதல் என அப்துல் வஹாப் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.

இதனால் வெறுத்துப்போன திமுக தலைமை 2023-ல் அவரை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து தூக்கியடித்தது. ஆனாலும், அவரது அடாவடிகள் அடங்கவில்லை. ஒரு பெண் அப்துல் வஹாப் தனது நிலத்தை ஏமாற்றியதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு புகார் எழுந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை குற்றம் சுமத்திய அனுப்பிய ஆதாரத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பின் வாட்ஸ்ஆப் உரையாடல் ஒன்றும் இடம்பெற்று அதிர வைத்துள்ளது. இந்த ஆதாரம் உள்ளூர் வாட்ஸ்ஆப் குழுக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழக அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு வகித்து வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. நகராட்சி நிர்வாக துறையில் ஒப்பந்தங்களை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு டெண்டருக்கும் 7.5% முதல் 10% வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதில் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை கூறியது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி அனுப்பியது. ஆனால், இதன் மீது தமிழக அரசும் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அமலாக்கத்துறை அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக எம்.பி., இன்பதுரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். ஆனாலும், நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி-யான இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தார். கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் கே.என்.நேரு மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக எம்.பி., இன்பதுரை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழக அரசின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலைக்கு பணம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை அனுப்பிய புகார் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதியுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சம்பந்தமாக ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசித்து வருவதாக அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.பி.எஸ். இராமன் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை குற்றம் சுமத்திய அனுப்பிய ஆதாரத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பின் வாட்ஸ்ஆப் உரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. நகராட்சி அதிகாரிகள் 43 பேரிடம் இருந்து தலா ஒரு லட்ச ரூபாயை அவர் வசூல் செய்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக இந்த நிதி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களில் இந்தத் தகவல் வெளியில் வந்துள்ளதால் பாளையங்கோட்டை வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal