‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்தபோதே தமிழகத்தில் இருந்து டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநிலத்தில் ஆளும் கட்சியையும், மத்தியில் ஆளும் கட்சியையும் ‘தில்’லாக எதிர்த்து அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய்.

விஜய் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு’ நிகழச்சிகளில் ‘பெண்கள் பாதுகாப்பு’ குறித்து மூச்சுக்கு முந்நூறு தடவை பேசுவார் விஜய். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பார் விஜய். சமீபத்தில் கூட ‘முதலில் …. விட்டு வெளியே வரட்டும் விஜய்… தனது குடும்பத்தை பார்க்கட்டும்.–..’ என தமிழக பா.ஜ.க. நயினார் நாகேந்திரன் பேசி ஒரு சில வாரங்களிலேயே ‘நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் விஜய். அதனால் நான் விவகாரத்து கேட்கிறேன். எனக்கு உரிய ஜீவனாம்சம் கொடுத்தாகவேண்டும்’ என விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த மனுதான் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் விஜய்யை மிகப்பெரிய அளவில் அப்செட் ஆக்கியிருப்பதாக சொல்கிறார்கள். இது பற்றி பனையூர் பக்கம் விசாரித்தபோது,

‘‘சார், சங்கீதா மனுத் தாக்கல் செய்த செய்தி கசிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமிருந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு ‘வாட்ஸ்அப்’ சுற்றறிக்கை பறந்தது. ‘‘யாரும் சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்து சொல்லக்கூடாது. டிவி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது. விஜய்யை ஆதரித்துப் பேசுகிறேன் பேர்வழி என யாராவது வாயை கொடுத்து உளறினால். தவறாக பேசினால், அவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்’’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, தேவையின்றி.. கட்சி அனுமதி இன்றி எந்தவொரு எதிர்வினையும் ஆற்றக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். ஏனெனில், சங்கீதா ஒரு ‘அனுதாப பிம்பமாக’ மாறினால், அது விஜய்யின் அரசியல் பிம்பத்தைப் பலமாகச் சிதைக்கும். சங்கீதா தற்போது லண்டனில் தனது குடும்பத் தொழிலைக் கவனித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் அவர் முன்வைத்திருக்கும் துரோகம் மற்றும் ‘மன உளைச்சல்’ போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் விஜய்யை அப்செட் ஆக்கியுள்ளன.

இப்போது, விஜய்யின் மிக நெருங்கிய வட்டத்தில் உள்ள சில நண்பர்கள் மற்றும் திரையுலகப் பெரியவர்கள் மூலம் ‘சமாதானப் பேச்சுவார்த்தை’களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம். ‘‘நீதிமன்றத்தில் பகிரங்கமாக மோதிக் கொள்வதை விட, பரஸ்பரம் பேசி முடித்துக் கொள்ளலாம்’’ என்ற முடிவில் இருக்கிறாராம். முக்கியமாக அந்த நடிகையின் பெயரை வெளியிட வேண்டாம் என்று சங்கீதாவிடம் சமாதானம் செய்ய விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாம். சங்கீதாவிடமிருந்து வரப்போகும் அந்தப் ‘‘பத்திரிகையாளர் சந்திப்பு’’ மிரட்டலைத் தள்ளிப்போடவோ அல்லது ரத்து செய்ய வைக்கவோ இந்தத் தீவிர முயற்சிகள்.

ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் விஜய்யின் அரசியல் வருகையைக் கவனித்து வருகின்றன. இப்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, விஜய்யின் ‘‘குடும்பப் பாங்கான’’ இமேஜை உடைக்க அவர்கள் காத்திருக்கிறார்கள். ‘‘தனது மனைவியையே பாதுகாக்க முடியாதவர், தமிழகப் பெண்களின் நலனை எப்படிக் காப்பார்?’’ என்கிற கேள்வியை மறைமுகமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் தூவிவிட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதைப் முறியடிக்கத்தான், ‘‘இது முழுக்க முழுக்கத் தனிப்பட்ட விஷயம்; அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் முடிச்சுப் போடாதீர்கள்’’ என்கிற பிரச்சாரத்தை விஜய்யின் ஐடி விங் ரகசியமாகத் தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 20-ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக இந்தத் தேதிகள் வருவது விஜய்க்குப் பெரும் பின்னடைவு. இதனால், அதற்கு முன்னதாகவே சங்கீதாவைச் சந்தித்துப் பேசி, ஒரு ‘மியூச்சுவல் அக்ரிமென்ட்’ கொண்டு வர விஜய்யின் தரப்பு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. அமைதிக்குப் பெயர் போன சங்கீதா, இத்தனை ஆவேசமாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாரென்றால், சமாதானம் அவ்வளவு எளிதாக இருக்காது. ஆனாலும், சங்கீதா விவகாரம் விஜய்க்கு அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், சந்திரசேகர் மூலமாகவும் சமதானப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியிருக்கிறது’’ என்றனர்.

எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் சமயோசிதமாக செயல்படுவாரா? அல்லது எதிரிகள் விரிக்கும் வலையில் விஜய் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal