தமிழகத்தில் 2026ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி இருக்கிறதா? இல்லையா? என்பது தலைநகர் சென்னையில்தான் தெரியவரும். ஏற்கனவே, தலைநகர் முன்பு அ.தி.மு.க. கோட்டையாகவும், தற்போது தி.மு.க. கோட்டையணாகவும் இருக்கிறது. அந்த வகையில் தலைநகரில் களம் காணும் தி.மு.க. பிரபலங்கள் யார்? யார்? என்று பார்ப்போம்..!

சென்னை மாவட்டம், வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. இதில் பிரபலங்கள் போட்டியிடப் போகும் சட்டமன்றத் தொகுதிகள் பற்றி பார்ப்போம்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிதான் கொளத்தூர். இதனால், இந்தத் தொகுதி ஸ்டார் அந்தஸ்தைப் பெறுகிறது. நான்காவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். கொளத்தூர் தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்திருப்பதால் மீண்டும் மு.க.ஸ்டாலின் வாகைசூடுவார் என்பதில் சந்தேகமில்லை.

சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி…

சேப்பாக்கம் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க.வின் கோட்டை என்றே சொல்லலாம்! இந்தத் தொகுதியில் ஏழு முறை தி.மு.க.வும், ஒருமுறை காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கிறது. மறைந்த முதல்வர் கலைஞர் மூன்று முறை இந்தத் தொகுயில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வராகியிருக்கிறார். அடுத்ததாக கடந்த 2021ல் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கிறார்.

2026 தேர்தலிலும் உதயநிதிதான் போட்டியிடுகிறார். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியைப் பொறுத்தளவில் அங்குள்ள குறைபாடுகளைப் போக்குவதற்காக தனி டீமையே களத்தில் இறக்கி வேலை பார்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். எனவே, மீண்டும் சேப்பாக்கத் தொகுதியில் உதயநிதி போட்டியிட வாய்ப்பிருக்கிறது.

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி…
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுயில் தி.மு.க. குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான டாக்டர் எழிலன் நாகநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் இவர் போட்டியிட வாய்ப்பிருக்கிறது.

நே.சிற்றரசு.

அடுத்ததாக, ரேசில் இருப்பவர் நே.சிற்றரசு. சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் இவர் உதயநிதியின் நெருங்கிய நண்பர். இளைஞரான இவர் தொகுதி மக்களுக்கு நன்கு பரீச்சமானவர் என்பதோடு, தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். கட்சியின் கிளைக்கழக நிர்வாகிகள் முதற்கொண்டு அனைவருக்கும் வேண்டியதை செய்துகொடுத்து வருகிறார். இதனால் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏராளமானோர் இவரது அலுவலகத்திற்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இதனால் இவரது கட்சி அலுவலகமே ஒரு ‘குட்டி’ அறிவாலயம் போல் செயல்பட்டு வருகிறது.

மாவட்டப் பொறுப்பாளராக இருப்பவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். எனவே, நே.சிற்றரசு மாவட்டப் பொறுப்பாளராக இருப்பதால், இந்த முறை ஆயிரம் விளக்கு தொகுயில் போட்டியிட நே.சிற்றரசுவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். தவிர, முதல்வரின் ‘குட்புக்’கிலும் இருக்கிறார்.

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி…

அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியும் தி.மு.க.வின் கோட்டையாகவே இருந்திருக்கிறது. ஒருமுறை மட்டும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோகுல இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகியிருக்கிறார். பலமுறை ஆற்காடு வீராசாமி போட்டியிட்ட தொகுதியில், அவருக்குப் பிறகு கடந்த இரண்டு முறையாக எம்.கே.மோகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான மோகனுக்கே இந்த முறையும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி…

துறைமுகம் தொகுதியைப் பொறுத்தளவில் 2011ல் மட்டும் அ.தி.மு.க.வின் பழ கருப்பையா வெற்றி பெற்றிருக்கிறார். 2016லும், 2021லும் சேகர் பாபு வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார் சேகர் பாபு. தொகுதியைப் பொறுத்தளவில் எந்தவொரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் சேகர் பாபு. காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்.

2026ல் துறைமுகம் தொகுதியில் சேகர் பாபுதான் போட்டியிடப் போகிறார். வாக்காளர்கள் மிகவும் குறைந்த தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினின் நிழலாக வலம் வரும் சேகர்பாபு மீண்டும் வெற்றி பெறுவது உறுதி!

திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதி…

திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் மீண்டும் தாயகம் கவிக்குதான் வாய்ப்பு என்கிறார்கள். தி.மு.க. தலைமையிடம் நல்ல நெருக்கத்தில் இருப்பதால் இவரையே மீண்டும் போட்டியிட வைக்கலாம் என தலைமை முடிவு செய்திருக்கிறது.

எழும்பூர் சட்டமன்றத் தொகுதி…

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க.வே அதிகமுறை வெற்றி பெற்றிருக்கிறது. 2011ல் மட்டும் தே.மு.தி.க. வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது தி.மு.க.வைச் சேர்ந்த பரந்தாமன் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவரும், சீனியர் அமைச்சர் ஒருவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். எனவே, இந்தமுறை புதியவரும், இளைஞருமான வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். தவிர, முன்னாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.ரவிச்சந்திரனும் சீட்டு கேட்டுவருகிறாராம். எனவே, இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறாக்ள்.

ராயபுரம் சட்டமன்றத் தொகுதி…

ராயபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. ஐந்து முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. தி.மு.க.வைச் சேர்ந்த ஐட்ரீம் மூர்த்தி சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்த முறை இவரும் சீட் கேட்கிறார். தவிர பழ.செல்வக்குமாரும் சீட் கேட்கிறார். ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி…

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் தற்போது தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரசைச் சேர்ந்த அசன் மவுலானா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்த முறை வேளச்சேரி தொகுதியில் தி.மு.க.வே நேரடியாக களம் காண இருக்கிறது. டாக்டர் கனிமொழி சோமு சீட் கேட்டு வருகிறார்.

பகுதிச் செயலாளர் ஆனந்த், துணை மேயர் மகேஷ், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் சீட்டு கேட்டு வருகின்றனர். வேளச்சேரி தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டால், அவரை எதிர்த்து எஸ்.ஜோயல் களம் காண்பார் என்கிறார்கள்.

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி…

பிராமணர்கள் அதிகம் வசிக்கக்கூடிய மயிலாப்பூர் தொகுயில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கக்கூடியவர் தி.மு.க.வைச் சேர்ந்த மயிலை த.வேலு. இவர் மீண்டும் சீட் கேட்டு வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த வ.மைத்ரேயனும் சீட் கேட்டு வருகிறார்.

தலைநகர் சென்னையில் உள்ள முக்கியத் தொகுதிகளில் போட்டியிடும் பிரபலங்கள் குறித்துப் பார்த்தோம்… கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்தால், சில வேட்பாளர்கள் மாற வாய்ப்பிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal