‘‘வலதுசாரிகளுக்கு வாய்ப்பு உருவாக்கக்கூடாது என்பதற்காக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் அதை கைவிடவும் இல்லை’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறிய தாவது: ஆளுநர் சட்டப்பேரவையில் வரம்பை மீறி செயல்பட்டதை நாடு அறியும். நெருக்கடிகளைத் தாக்குப்பிடித்து, திமுக அரசு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியுள்ளது.

பாஜக அரசு தமிழக அரசுக்கு, தந்திருக்கும் நிதி நெருக்கடியை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சட்டப்பூர்வமான தடை ஏற்படாத வண்ணம், அந்த சதியை முறியடிக்கும் வகையில், ரூ.5 ஆயிரத்தை முதல்வர் வழங்கியுள்ளார்.

வயிற்றெரிச்சலில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும், அதற்கான நோக்கம் இருக்கிறது. கோரிக்கை வைப்பது இயல்பானது. விசிக தொடங்கப்பட்டதில் இருந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்களது கோரிக்கை.

ஆனால், அதை சாத்தியப்படுத்துவதற்கான சூழல் இப்போது இல்லை என்பதை உணர்ந்திருக்கிறோம். இந்த விஷயத்தில் கூட்டணிகளில் சலசலப்பு ஏற்படுத்தி, வலதுசாரிகளுக்கு வாய்ப்பு உருவாக்கக்கூடாது. ஆட்சியில் பங்கு கோரிக்கைக்கு விசிக அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் அதைக் கைவிடவும் இல்லை.

ஆட்சியில் பங்கு கேட்பதற்கு, காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. இதன்மூலம் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிரணியினர் நம்புகிறார்கள். திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்.

காங்கிரஸ் தேசிய தலைமை தான் இறுதி முடிவு செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார்கள். அது முடிவு அல்ல. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal