தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க. சார்பில் தென்மாவட்டத்தில் பெரும்பான்மயாக இருக்கும் இந்து நாடார் சமுதாயத்திற்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக பெண் ஒருவருக்கும், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 தமிழ்நாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்கள் காலியாகின்றன. இந்த 37 இடங்களுக்கான எம்.பிக்களை தேர்வு செய்ய மாநிலங்களவை தேர்தல் வரும் மார்ச் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை – மார்ச் 6 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9. போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் நிற்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.
சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணியை பேசும் கட்சிகள் தரப்பில் சிலர் ராஜ்ய சபா எம்பியை கேட்கக் கூடும். ஏற்கனவே மதிமுக தரப்பில் வைகோவுக்கு ராஜ்ய சபா கொடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதேபோல் விசிகவுக்கு குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கும் பட்சத்தில், அவர்களும் ராஜ்ய சபா எம்பிக்கு சில அழுத்தம் கொடுக்கலாம். இதனிடையே திமுக தரப்பில் பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் என்ஆர் இளங்கோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபாவில் சீனியரான திருச்சி சிவாவிற்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

இதனால் மீதமுள்ள 2 ராஜ்ய சபா சீட்கள் யார் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தியூர் செல்வராஜ் மற்றும் கனிமொழி சோமு ஆகியோரின் இடங்களுக்கு புதியவர்கள் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. கனிமொழி சோமுவுக்கு பதிலாக வேறொரு பெண் முகத்தை திமுக ராஜ்ய சபாவுக்கு அனுப்பக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தென்மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் இந்து நாடார் சமுதாயத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்க வாய்ப்பிருக்கிறது. காரணம், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு, தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே கழகத்திற்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் உழைத்துக்கொண்டிருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. ஆங்கிலப் புலமை மிக்க பூங்கோதை ஆலடி அருணாவை டெல்லிக்கு அனுப்பினால் தமிழகத்தில் குரலாக ஒலிப்பார் என்கிறார்கள். தவிர, வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் இந்து நாடார் வாக்குகளை அப்படியே தி.மு.க. அள்ளிவிடும்.

அடுத்து, கிறிஸ்டியன் நாடார் சமுதயாத்தைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சனும் ரேசில் இருக்கிறார். ஏற்கனவே தென்மாவட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக அ.தி.மு.க. சார்பில் இன்பதுரைக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, தென்மாவட்டத்தில் ஒருவருக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக பூங்கோதை ஆலடி அருணாவுக்கு கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

அடுத்து, மத்திய மாவட்டமான திருச்சியில் அடர்த்தியாக வசிக்கும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் வரை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை. இந்த கோரிக்கையை தி.மு.க. பிரமுகரும், வழக்கறிஞருமான தங்க கோபிநாத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவரும் ராஜ்யசபா சீட்டுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார். இவருக்கு அல்லது முத்தயரையர் சமுதாயத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
