அதிமுக &- பாஜக கூட்டணியில் இணைய ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அமித் ஷாவை ஓ.பி.எஸ். சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து செயல்பட்ட, அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் அதிமுக-பாஜ கூட்டணியில் இணைந்து விட்டார். ஓபிஎஸ்சை அதிமுகவிலும், கூட்டணியிலும் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எந்த முடிவும் எடுக்காமல் ஓபிஎஸ் மவுனமாகவே இருந்தார்.

இதனால் அவருடன் இருந்த நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர். இன்னும் சிலர் மாற்று கட்சிகளுக்கு தாவ தயாராகி வருகின்றனர். ஓபிஎஸ் திமுக அணிக்கு செல்லப்போகிறார், தவெக பக்கம் சாயப்போகிறார் என்றெல்லாம் யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் ஓபிஎஸ் விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, ஓபிஎஸ் தேதி கேட்டுள்ளாராம். இன்னும் 2 நாளில் ஓபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி ‘மேலிட’ வட்டாரத்தில் பேசினோம். ‘‘ஓபிஎஸ்சும் பாஜக அணியில் இருக்க அமித்ஷா விரும்பினார். இதனால் அவருடன் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை ஏற்று ஓபிஎஸ் பாஜக அணியில் இணைய முடிவு செய்துள்ளார். விரைவில் அவர் அமித்ஷாவை சந்திப்பார். எடப்பாடி பழனிசாமியை, அமித்ஷா சமாதானப்படுத்தி விடுவார். வரும் 1 ம் தேதி மோடி தமிழகம் வரும் போது அவருடன் மேடையில் ஓபிஎஸ்ஸும் ஏறுவார்’’ என்றனர்.

இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் இணையும் போதே தனக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு விட்டாராம். அதே போல், டிடிவி.தினகரன் தனக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டுள்ளார். இதை பாஜக தலைமையும் ஏற்றுக்கொண்டு விட்டதாம். ஏதாவது ஒரு வட மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா சீட் தருவதாக தினகரனுக்கு பாஜக தலைமை உறுதி அளித்துள்ளதாம்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி இன்னும் ஓ-பிஎஸ்ஸை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்கிறார்கள். அமித் ஷா கையில் என்ன ‘மாயஜாலம்’ இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal