சமீபத்தில்தான் மகளிர் டி20 மேட்ச் முடிந்தது. இதில் ஆர்.சி.பி. அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கான சி.எஸ்.கே. அணி இல்லை என்பதுதான் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் விரைவில் மகளிர் பிரீமியர் லீக்கில் அணி அமைக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ‘பெண்கள் கிரிக்கெட் அணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் ஆண்டுகளில் சிஎஸ்கே அதன் தடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எங்களுடைய முதல் இலக்காக பெண்கள் கிரிக்கெட் இருக்கிறது. படிப்படியாக மற்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்த உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல்லில் மொத்தம் 11 அணிகள் உள்ளன. இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள் என ஒவ்வொருவரும் ஒரு அணியின் உரிமையாளர்களாக உள்ளனர்.
அதில் முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான, வலுவான அணிகளில் ஒன்றாக உள்ளது. தோனியின் தாக்கம், விசுவாசமான ரசிகர்கள் காரணமாக அந்த அணியின் பிராண்ட் உச்சத்தில் உள்ளது. சமீபத்திய மதிப்பு சுமார் $235 மில்லியன் (கிட்டத்தட்ட $2,000 கோடி)
சிஎஸ்கே அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனம் அணியின் உரிமையாளராக உள்ளது. இது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இதன் சேர்மன் என்.சீனிவாசன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்தவர். 2025 செப்டம்பரில் அவர் மீண்டும் சிஎஸ்கேசிஎல் சேர்மனாக நியமிக்கப்பட்டார். அவரது மகள் ரூபா குருநாத் உள்ளிட்டோர் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டராக கே.எஸ்.காசி விஸ்வநாதன் அணியின் தினசரி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடர்களில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள திமுக குடும்பத்தை சேர்ந்த உதயநிதி சிஎஸ்கே அணியை வாங்க இந்தியா சிமெண்ட்ஸ் சேர்மன் என்.சீனிவாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.2,200 கோடிக்கு வாங்க இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கசிகிறது. உதயநிதி ஸ்டாலின் வெகுநாட்களாக சிஎஸ்கே ரசிகராக இருந்து வருகிறார். அவருக்கு வெகுநாட்களாக சிஎஸ்கே அணியை வாங்க வேண்டும் என்கிற திட்டம் இருந்தாகக் கூறப்படுகிறது. இதன்பிறகு மகளிர் அணியை தொடங்கவும் உதயநிதி திட்டமிட்டிருக்கிறாராம்.
ஏற்கெனவே திமுக தலைமைக்கு நெருங்கிய குடும்பமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வாங்கி நடத்தி வருகிறார். அந்த வகையில் சிஎஸ்கே அணியை உதயநிதி வாங்கினால் இந்தியாவில் ஐபிஎல் அணியில் இருக்கும், 11 அணிகளில் இரண்டு அணிகள் கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கும்.
