கடந்த 2016ல் சிறிய கட்சிகளை கூட்டணிக்கு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை அதிக இடங்களில் போட்டியிட வைத்து வெற்றி பெற்று சாதனை படைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா! அந்த மனநிலைக்கு மு.க.ஸ்டாலின் வந்துவிட்டதாகவும், அதற்கான ‘தில்’ முடிவை எடுக்கத் துணிந்து விட்டதாகவும் தகவல்கள் வருகிறது.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், ‘தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும்’ என கனிமொழி பேசியிருந்தார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ராமதாஸின் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வரவிருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் கனிமொழி மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபட்டு வருகிறார்.

காரணம், தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையேயான உரசலை மாணிக்கம் தாகூர் எம்.பி. அதிகப்படுத்தி வருகிறார். மதுரை வடக்குத் தொகுதியையும் கேட்டு வருகிறார். இந்த நிலையில்தான் மு.க.ஸ்டாலினுக்கு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஒரு சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.விற்கு செல்லாமல் பார்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அதாவது, விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி அமைந்தது. இந்தக் மக்கள் நலக்கூட்டணி அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை அப்படியே அள்ளியது. இதனால், மிகக்குறைந்த வாக்கு சதவீத வித்தியாசத்தில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். சாதனையை ஜெயலலிதாவும் படைத்தார்.

இதே போல், 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு ‘கல்தா’ கொடுத்துவிட்டு, சிறிய கட்சிகளை கூட்டணியில் இணைத்தாலே தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. காரணம், 2016ல் மக்கள் நலக் கூட்டணி எதிர்ப்பு வாக்குகளை பிரித்தது போல், 2026ல் த.வெ.க. ‘எதிர்ப்பு’ வாக்குகளை பிரிக்கும்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., ஒரு பிரிவு பா.ம.க., அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்ற மனநிலையில் இருக்கும் அ.ம.மு.க.வினர், அதிருப்தியில் இருக்கும் ஓ.பி.எஸ். போன்ற காரணங்கள் அ.தி.மு.கவிற்கு பெரும் பின்னடைவுதான். தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. எனவே, மீண்டும் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. எனவே, காங்கிரசை கழற்றிவிட்டுவிட்டு, தே.மு.தி.க., டாக்டர் ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றவர்களை சேர்த்தாலே, காங்கிரசின் இழப்பை ஈடுகட்டிவிடலாம்’ என்ற அந்த பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.

எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ‘கல்தா’ கொடுத்துவிட்டு சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் ‘தில்’ முடிவில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal