தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் பிடிகொடுக்காமல் பேசி வரும் பிரேமலதாவிடம், கூட்டணி தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நிர்வாகிகள், அமைச்சர் பதவியை கேட்டு மல்லுகட்டி வருகிறார்கள். கூட்டணி குறித்து யாரும் பொது வெளியில் பேசக் கூடாது என டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறதா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் கிரீஷ், இதை திமுகதான் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை திமுக நிர்வாகி தளபதி கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து தற்போது இரு தரப்பிடையே மோதல் போக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து பேசியிருந்தார்.

அப்போது இருவரும் கூட்டணி குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திமுகவிடம் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதிலும் பிரேமலதா விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கனிமொழி, கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் திமுகவாக இருந்தாலும் சரி என்டிஏ கூட்டணியாக இருந்தாலும் சரி 15 முதல் 20 சட்டசபை தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் வேண்டும் என கேட்டு பிடிவாதம் பிடிக்கிறாராம். ஆனால் திமுகவோ 5 இடங்களை மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்க முடியும் என்கிறார்கள். 5 என்பது மிஞ்சி போனால் 6 வரை செல்லலாம் என்றும் இரட்டை இலக்கத்திற்கு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ராஜ்யசபா சீட்டெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்லிவிட்டார்கள்.

எனவே 5 அல்லது 6 சீட்டுகளுக்கு தேமுதிக ஓகே சொன்னால் மேற்கொண்டு பேச்சு நடத்தப்படும். இல்லாவிட்டால் தேமுதிகவை லேசில் விட்டுவிடலாம் என திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாம். தவிர, தி.மு.க. கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறினால், தே.மு.தி.க.வுக்கும், ராமதாஸ் பா.ம.க.வுக்கும் இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்கலாம். அதற்கு காங்கிரஸ் வெளியேறவேண்டும்.

இந்த நிலையில் பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை குறித்து கனிமொழியிடம் கேட்ட போது அவர் மறுத்துள்ளார். தான் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தலைவர் ஸ்டாலின் அது குறித்து அறிவிப்பார் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நெருப்பில்லாமல் புகையுமா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal