அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை “அண்ணன்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசிய போது, அங்கிருந்த தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதேபோல் எங்களுக்கு சண்டை இருந்தது உண்மை என்று ஒப்புக்கொண்ட டிடிவி தினகரன், தமிழ்நாடு மற்றும் அமமுகவின் நலனுக்காக இந்த கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் என்டிஏ கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களும் மேடையில் ஏற்றப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி மேடையில் ஏறிய போது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கைகுலுக்கி சென்றார்.

இதன்பின் டிடிவி தினகரன் பேசுகையில் பிரதமர் மோடியை வரவேற்றுவிட்டு, அடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரை கூறினார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் உற்சாகம் ஆரவாரம் எழுப்பினர். இதையடுத்து டிடிவி தினகரன் பேசுகையில், தமிழ்நாட்டில் நடந்து வரும் மக்கள் விரோத குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில், அமமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று விரும்பினார்கள். நாங்கள் முழுமனதுடன் என்டிஏ கூட்டணிக்கு தலைமையேற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமி அண்ணன் அவர்களை ஏற்று வந்துள்ளோம்.
நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். எங்களுக்கு சண்டை இருந்தது உண்மை தான். ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும், அமமுக நலன் கருதியும் நாங்கள் கோபங்களை விட்டுவிட்டோம். 2021ல் எங்களால் முடியாமல் போன ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கிட எந்தவித தயக்கமும் இன்றி இந்த கூட்டணியில் இணைத்துக் கொண்டுள்ளோம். நமது வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் பாடுபடுவான் என்று பிரதமருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக் கொள்கிறேன். எதிர்ப்பது என்றால் உறுதியாக எதிர்ப்போம்.. ஆதரிக்கிறோம் என்றாலும் முழுமையாக ஆதரிப்போம்.
நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கிலும், குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இணைந்துள்ளோம். இன்று தமிழ்நாடே ஒரு கொள்ளை நாடாக மாறி இருக்கிறது. போதைப்பொருள் பயன்பாட்டின் முக்கிய இடமாக தமிழ்நாடு மாறிவிட்டது என்றும் தெரிவித்தார்.
