அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்தவர்கள் பதவி மற்றும் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள் அடிமட்டத்திலேயே இருக்கிறார்கள் என்ற புலம்பல்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறது.
இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் உள்ள மூத்த உடன்பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மீதான அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்த (இணையும்) புள்ளிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. எவ வேலு, முத்துச்சாமி சேகர்பாபு, செந்தில் பாலாஜி தொடங்கி, கட்சியில் புதிதாய் சேர்ந்த மருது மருது அழகுராஜ், அன்வர் ராஜா உள்ளிட்டோருக்கு பதவிகள் வாரி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு, கோவை, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக பதவி வகித்து வந்த திமுகவினரின் பொறுப்புகள் அதிமுகவினருக்கு தாரைவாக்கப்பட்டு வருவதாக புலம்புகின்றனர் உடன்பிறப்புகள்.

தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து முக்கிய பதவிகளைப் பெறுவது புதிதல்ல. குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிளவுகள், ஓபிஎஸ்&-இபிஎஸ் மோதல், பாஜக உடனான கூட்டணி தொடர்பான குழப்பங்கள் ஆகியவை பலரை திமுக நோக்கி நகர வைக்கிறது.
தலைமை சமாதானம் சொல்லி வந்தாலும், நீண்ட காலமாக திமுகவில் பணியாற்றி வரும் பாரம்பரிய தொண்டர்கள், ‘‘மாற்றுக் கட்சியிலிருந்து இருந்து வருபவர்களுக்கு உடனே பதவி; கொடி பிடித்து, சுவரொட்டி ஒட்டி இயக்கத்தை வளர்த்த நாங்கள் ஓரங்கட்டப்படுகிறோம்’’ என புலம்பி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்த குழப்பங்களே இந்த மாற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைந்தன. 2017-ல் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டு, பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தார். அதிமுக மீண்டும் ஓபிஎஸ்-, இபிஎஸ் அணிக்குள் வந்த நிலையில், டிடிவி தினகரன் அமமுக என தனிக்கட்சி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகுதி நீக்கங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, அதிமுக மற்றும் அமமுகவிலிருந்து பலர் திமுகவில் இணைந்தனர்.
இதற்கு முன்னரே அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த சேகர்பாபு, ஏ.வ.வேலு, முத்துச்சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும், மாநில நிர்வாகிகளாகவும் முக்கிய இடங்களைப் பிடித்தனர். 2018 இறுதியில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கட்சியில் இணைந்த 50 நாட்களுக்குள் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அவரது வருகைக்குப் பிறகு கரூர் மாவட்டத்தில் திமுக செல்வாக்கு உயர்ந்ததாக தலைமையே நினைத்தது. பின்னர் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை கொடுத்து அமைச்சராக்கினார் ஸ்டாலின். தற்போது திமுகவின் மண்டலப் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர் மாவட்ட அரசியலில் கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்ததை அடுத்து, தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தற்போது அவர் தேனி மக்களவை உறுப்பினராக உள்ளார். இதேபோல், 2021-ல் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2023-ல் திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2020-ல் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. லட்சுமணனுக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன், திமுகவில் இணைந்த பிறகு இலக்கிய அணி செயலாளர் பொறுப்பைப் பெற்றார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும், மூன்று முறை ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்த மைத்ரேயனுக்கு, திமுகவில் இணைந்த உடனே கல்வியாளர்கள் அணி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜாவுக்கு கலாச்சார அணி உறுப்பினர் பதவி, சமீபத்தில் இணைந்த மருது அழகுராஜுக்கு செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இதேபோல், விழுப்புரத்தைச் சேர்ந்த லட்சுமணன், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பயன்படுத்தி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த அன்பு நாகராஜுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு, ஈரோட்டைச் சேர்ந்த பி.ராசுவுக்கு துணைச் செயலாளர் பதவி, திருப்பூரைச் சேர்ந்த எஸ்.குமாருக்கு தொழிலாளர் பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலைமை, “எதிரிகளை நண்பர்களாக மாற்றும் அரசியல் யுக்தி” என திமுக வட்டாரங்கள் விளக்கினாலும், பல மாவட்டங்களில் பழைய திமுக நிர்வாகிகள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டனர்.
கோவையில் செந்தில் பாலாஜி, ஈரோட்டில் முத்துச்சாமி மற்றும் தோப்பு வெங்கடாசலம், தேனியில் தங்க தமிழ்செல்வன், சென்னையில் சேகர்பாபு, திருவண்ணாமலையில் ஏவ வேலு, தென் மாவட்டங்களில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் ‘குறுநில மன்னர்கள்’ போல செயல்படுவதாகவும், 40-50 ஆண்டுகளாக திமுகவில் இருந்து வந்த பல முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் புலம்பல்கள் எழுகின்றன. அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தங்களுடன் வந்த விசுவாசிகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
தற்போது வைத்தியலிங்கம் உள்ளிட்ட மேலும் சிலர் திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், அவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டால், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தங்களின் பொறுப்புகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே டெல்டாவில் பழனிமாணிக்கம் உள்ளிட்டோரை இருக்கும் இடம் தெரியாமல் செய்த டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் அதிருப்தியில் உள்ளனர்.
மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் உடனடி முக்கியத்துவம் அளிக்கும் திமுக அணுகுமுறை, கட்சியை அரசியல் ரீதியாக வலுப்படுத்தினாலும், நீண்ட கால தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என காலம் காலமாக கட்சிக்காக உழைத்த தி.மு.க.வினர் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்’’ என்றனர்.
அறிவாலயம் வந்தவர்கள் ‘வாழ்ந்து’ வருவதும், பல காலங்கள் உழைத்து வந்தவர்கள் ‘வீழ்ந்து’ வருவதும்தான் வேதனை அளிக்கிறது என்கிறார்கள் உண்மையான உடன்பிறப்புக்கள்!
