தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில, டிடிவி தினகரன் இது தொடர்பாகத் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக &- பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். கூட்டணியை அறிவித்த கையோடு அவர் பியூஷ் கோயலையும் நேரில் சந்தித்தார்
இது பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆளும் திமுகவுக்கு எதிராக மிகவும் வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்க பாஜக- & அதிமுக முயன்று வருகிறது.

இப்போது வரை இந்தக் கூட்டணியில் அன்புமணியின் பாமக மற்றும் ஐஜேகே கட்சிகள் இணைந்துள்ளன. வரும் 23ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில், அதில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடை ஏற்ற பாஜக திட்டமுள்ளது. அதற்குள் அதிமுக உடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும், இதர கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்யவும் பாஜக திட்டமிட்டு வருகிறது.
இதற்கிடையே கூட்டணி தொடர்பாக இன்றைய தினம் அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகம், புதுச்சேரி அமமுக மாவட்டச் செயலாளர்கள் 80 பேருடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். கூட்டணியை அறிவித்த கையோடு அவர் பியூஷ் கோயலையும் நேரில் சந்தித்தார். அவரை அப்போது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் இணையவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் அமமுகவில் சில தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடிக்கு எதிராக டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்த நிலையில், மீண்டும் அவருடனேயே கூட்டணி அமைப்பது எப்படிச் சரியாக இருக்கும் என்பது நிர்வாகிகளின் கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாகவும் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
அதேநேரம் டிடிவி தினகரன் கிட்டத்தட்ட என்டிஏ கூட்டணியில் இணைய ஓகே சொல்லிவிட்டது போலவே அவரது சமீபத்திய நேர்காணல்களில் தெரிந்தது. அதாவது முதலில் எடப்பாடி தலைமையை நிச்சயம் ஏற்க மாட்டேன் எனச் சொல்லி வந்த டிடிவி தினகரன், பிறகு திடீரெனத் தேர்தல் காலங்களில் துரோகிகளைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றார். இது என்டிஏ கூட்டணியில் இணைய கிரீன் சிக்னலாகவே பார்க்கப்பட்டது.
அதிமுகவுடன் நேரடியாக அமமுக கூட்டணியில் இல்லை. மாறாக என்டிஏ கூட்டணியிலேயே அமமுக இருக்கிறது.. அந்தக் கூட்டணியில் அதிமுகவும் இருக்கிறது என்ற பாஜகவின் விளக்கத்தை அமமுக தரப்பு ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. அதேநேரம் தொகுதிப் பங்கீடு எப்படி இருக்கும் என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை. டிடிவி தரப்பு எடப்பாடியுடன் நேரடியாகத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச வாய்ப்பில்லை.
எனவே, மற்ற கட்சிகளுக்கும் சேர்த்து அதிமுகவிடம் இருந்து பாஜக தேவையான தொகுதிகளைப் பெறும் எனத் தெரிகிறது. அதன் பிறகு டிடிவி தினகரன் தரப்புக்கு பாஜகவே தொகுதிகளைக் கொடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இவை எல்லாமே இன்றைய தினம் டிடிவி தினகரனின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகே இறுதியாகும்’’ என்றனர்.
