தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி வலுவிழந்தது; இது, தெற்கு கர்நாடக பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இன்று நகரக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக் கூடும்.

தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான 2வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal