டெல்லி, ஒடிசா சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வைஜெயந்த் பாண்டா, இரு தேர்தல்களிலும் அந்த கட்சி அமோக வெற்றி பெற வியூகம் வகுத்துக் கொடுத்தவர்!

இந்த நிலையில்தான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் வைஜெயந்த் பாண்டா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அடுத்த ஆண்டு நடைபெறும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தற்போதே துவங்கி விட்டன. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் வைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஏற்கனவே 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கொண்டு இந்த கூட்டணிக்குள் பிற கட்சிகளை சேர்ப்பது தொடர்பான முயற்சிகளில் இரண்டு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்தவரையில் கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான தேமுதிக, பாமக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் பாமக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளை கூட்டணியில் இணைக்க இன்றைய ஆலோசனையில் இரு கட்சிகளும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வேளையில், பாஜக சார்பிலும் தேர்தல் பரப்புரை விரைவில் தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 12ஆம் தேதி மதுரையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் பரப்புரை தொடங்க உள்ளது.

இந்த சந்திப்பில், மதுரையில் துவங்க உள்ள பாஜக தேர்தல் பரப்புரை துவக்க விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் வைஜெயந்த் பாண்டா ஏற்கனவே டெல்லி, ஒடிசா சட்டமன்ற தேர்தல்களில் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக, இந்த இரண்டு தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடித்தது. அதே போன்று தமிழகத்திலும் பாஜக தலைமையிலான கூட்டணியை இவர் ஆட்சியில் அமர்த்துவார் என்றும் பாஜக தலைமை இவரை களமிறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal