தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக நெல்லை மாவட்டத்தில் ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார். தென்காசியில் எப்போது ஆக்ஷன் எடுப்பார் என காத்திருக்கிறார்கள் உண்மையான உடன் பிறப்புக்கள்!
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக கட்சிரீதியாக மாவட்டங்களை உருவாக்கி, பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தை திமுக இதுவரை மத்தி, கிழக்கு என இரண்டாக பிரித்து வைத்திருந்தது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது மத்திய மாவட்டம். நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 3 தொகுதிகளை உள்ளடக்கியது கிழக்கு மாவட்டமாக இருந்தது.
மத்திய மாவட்டத்துக்கு அப்துல் வகாப் எம்எல்ஏ மாவட்ட செயலாளராகவும், கிழக்கு மாவட்டத்துக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் பொறுப்பாளராகவும், அம்பாசமுத்திரம் ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்) சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்டத்திற்கு ஆவுடையப்பன் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்றுவது, தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மாவட்ட செயலாளர்களை நியமிப்பது போன்ற பணியில் திமுக தலைமை ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திக் மாற்றப்பட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளராக துரை செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 3 ஆக உயர்த்தி உள்ளது திமுக தலைமை. திருநெல்வேலி மாவட்ட திமுக திடீரென பிரிக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, பல்வேறு உள்கட்சி பிரச்னைகள் தான் காரணம் என்று தெரிய வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பல கோஷ்டி பூசல்கள் உள்ளன. மாநகரம், மாவட்டம், ஒன்றியம், பேரூர் என அனைத்து பிரிவுகளிலும் உள்கட்சி பூசல் காணப்படுகிறது. மாநகரில் நடந்த உள்கட்சி பூசலால், தற்போதைய மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப்பின் பதவியே பறிபோனது.
மேலும் மேயராக இருந்த சரவணனும் உள்கட்சி பூசலால் பதவியை பறிகொடுத்தார். இது தவிர கிழக்கு மாவட்ட திமுகவில் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ஒரு கோஷ்டியாகவும், ராதாபுரத்தை சேர்ந்த சபாநாயகர் அப்பாவு ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக திமுகவில் ஆவுடையப்பனுக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்லும் அளவிற்கு, மறைமுகமாக மோதல் நீடித்து வருகிறது. ஆவுடையப்பன் நியமிக்கும் நிர்வாகிகளுக்கு சபாநாயகர் அப்பாவு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. அதே போல் சபாநாயகர் ஆதரவாளர் பதவி பெறும் நபர்களை ஆவுடையப்பன் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் கிழக்கு மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொய்வடையும் நிலை ஏற்பட்டது.
ஒருவேளை அப்பாவு மீண்டும் போட்டியிட்டால் ஆவுடையப்பன் தரப்பினர் எதிராகவே செயல்படுவார்கள் என்ற பேச்சும் அடிபட்டது. எனவே வரும் 2026 தேர்தலில் ராதாபுரம் தொகுதிக்கு சபாநாயகர் அப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஆவுடையப்பன் தரப்பு திமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளது. மேலும் ராதாபுரம் தொகுதியில், முன்னாள் எம்.பி ஞானதிரவியம் தனக்கு அல்லது தன்னுடைய மகனுக்கு சீட் வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதற்கிடையே தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. கடந்த முறை தி.மு.க. உட்கட்சிப் பூசலில் ஆலங்குளம் தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது. எனவே, தென்காசி மாவட்டம் பக்கமும் முதல்வர் தன் பார்வையை திருப்பவேண்டும் என்கிறார்கள் நடுநிலையான உடன் பிறப்புக்கள்!
