தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில்தான் விஜய் யாருடைய (எந்தக் கட்சி) வாக்குகளை பிரிக்கிறார். விஜய்யால் யாருக்கு பாதிப்பு என்பதை ஆராய்ந்து, அதற்கேற்றால் போல் கூட்டணியை அமைக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக மட்டும் 133 இடங்களையும், அதன் கூட்டணி மொத்தம் 159 இடங்களையும் கைப்பற்றியது. அதே சமயம், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களை மட்டுமே வென்றது, இதில் அதிமுக 66 இடங்களைப் பெற்றது. இரு கூட்டணிகளுக்கும் இடையிலான மொத்த வாக்கு சதவீத வேறுபாடு சுமார் ஆறு சதவீதம் இருந்தது.

கடந்த வார தொடக்கத்தில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்துவது மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சில முன்னாள் அதிமுக தலைவர்களின் சாத்தியமான மறுவருகை குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் தெரிகிறது.

திமுக எதிர்ப்பு வாக்குகளை தவெக பிரிக்கிறதோ என்ற கேள்வியும் கடுமையாக நிலவி வருகிறதாம். திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரிக்கிறார் என்று டெல்லி நம்புகிறதாம். அதனால்தான் ஒருங்கிணைப்பு குறித்து டெல்லி மேலிடம் எடப்பாடியிடம் வலியுறுத்தியிருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இபிஎஸ் இந்த நகர்வில் ஆர்வம் காட்டி வருகிறார். திருவாரூர் பிரச்சாரம் முடிந்த பிறகுக்கூட விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி போனில் பேசியிதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஆனால், விஜய்யின் வருகை திமுகவின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அது நன்மைக்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சில பாஜக தலைவர்கள் நம்புகிறார்களாம். அதாவது விஜயை மாற்று என்று நினைத்த பலர் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் மீண்டும் திமுக பக்கம் போகலாம் என்ற நிலையும் இருக்கிறது என டெல்லிக்கு தகவல்கள் போயிருக்கிறது.

இந்த நிலையில்தான் விஜய்யால் எந்தக்கட்சிக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை அறிய ‘மேலிடம்’ டெல்லியிருந்து சிறப்பு குழு மற்றும் உளவுத்துறையை நியமித்திருக்கிறதாம். அதற்கேற்றவாறு அ.தி.மு.க. தலைமையில் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் உள்ளனர். இந்த கூட்டணி எல்லாம் வருகிற டிசம்பம் மாதத்திற்குள் முடித்துவிடவேண்டும் என்பதிலும் டெல்லி உறுதியாக இருக்கிறதாம்.

ஆக மொத்தத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது என்கிறார்கள் ‘மேலிட’ வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal