வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், திராவிடக் கட்சிகளில் யாருக்கு சீட்டு என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில், அமித் ஷாவின் அரசியல்… உட்கட்சிப் பிரச்னை… என திக்குமுக்காடிப்போயிருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலைப் போல் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட அவ்வளவாக யாரும் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
த.வெ.க.வைப் பொறுத்தளவில் சீனியர்கள் யாரும் இல்லை… புஸ்ஸி ஆனந்தும்…. ஆதவ் அர்ஜுனாவும் யாரையும் விஜய்யை சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கூடும் இளைஞர்களின் கூட்டம் ஒட்டுகளாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த தங்க கோபிநாத் முசிறி சட்டமன்றத் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறாராம். கனிமொழியின் தீவிர ஆதரவாளரான தங்க. கோபிநாத் ‘கனிவு பவுண்டேசன்’ மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். முசிறி தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க.வில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குத்தான் வாய்ப்பு என்பதால், இவரும் சீட்டுக் கேட்டு காத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், ‘‘பெரியாரின் கொள்கை வாரிசே!” என்ற வாசகம் பதியப்பட்டுள்ள ஓவியத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு பரிசாக வழங்கிய கனிவு பவுண்டேஷன் நிறுவனர் தங்க கோபிநாத்.
திமுக நிர்வாகியும், கனிவு பவுண்டேஷன் நிறுவனருமான வழக்கறிஞர் தங்க கோபிநாத், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது வழங்கப்படுவதை முன்னிட்டு, கலைஞர் அவர்கள் சிறுவயதில் இருந்த கனிமொழி கருணாநிதியை தந்தை பெரியாரிடம் கொள்கை வாரிசாக ஒப்படைக்கும் தருணத்தை பிரதிபலிக்கும் ஓவியத்தை பரிசாக அளித்தார். அந்தப் புகைப்படத்தில் “பெரியாரின் கொள்கை வாரிசே!” எனும் வாசகம் பதியப்பட்டுள்ளது’’ என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சித்தப்பா சீமானுர் பிரபு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி, பிறகு மன உளைச்சலிலேயே உயிரை விட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றளவிலும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!