சமீபத்தில்தான் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படம் வெளியானது. அதில் சனிக்கிழமை மட்டும்தான் ஹீரோவுக்கு துணிச்சல் வரும். இதை எதற்காகச் சொல்கிறேன் என்கிறீர்களா?- கடந்தாண்டு கட்சி ஆரம்பித்து 2026ல் முதல்வராகும்(?) விஜய் தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமைகளில் மட்டுமே தொடங்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ‘விஜய் சாட்டர்டே’ என அவரது ரசிகர்கள் கொண்டாட தொடங்கியிருக்கிறார்கள்.
செப்டம்பர் 13 முதல் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் தொடங்குகிறார். மொத்தம் 14 சனிக்கிழமைகள், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர் பிரசாரம் செய்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி தமது பிரசாரத்தை அவர் தொடங்கி டிசம்பர் 20ல் முடிக்கிறார். இந்த 4 மாதங்களில் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம் செய்கிறார். அக்டோபர் 5ம் தேதி ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
பயணத் திட்டம் விவரம் வருமாறு; சனிக்கிழமை பிரசாரம்;
செப்டம்பர் – 13, 20, 27 – திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், வடசென்னை.
அக்டோபர்- 4,11, 18, 25 – கோவை, நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்சென்னை, செங்கல்பட்டு.
நவம்பர்- 1, 8, 15,22, 29 – கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, விருதுநகர், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம்.
டிசம்பர் – 6,13,20 – திண்டுக்கல், தேனி,மதுரை
அக்டோபர் – 5 – ஞாயிற்றுக்கிழமை – கோவை, நீலகிரி,திருப்பூர், ஈரோடு
மொத்தம் 14 ஊர்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசார பட்டியலில் ஒரே ஒரு ஊரில் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.
‘விஜய் சாட்டர்டே’ குறித்து த.வெ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசும்போது, ‘‘சார், தே.மு.தி.க.வை விஜயகாந்த் ஆரம்பித்தபோது, அவருக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆதரவு இருந்தது. ஆனால், எங்கள் தலைவருக்கு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு இருக்கிறது. முதியவர்கள் ஆதரவு என்பது குறைவுதான்.
ஏற்கனவே, இரண்டு மாநாட்டை நடத்தி மாஸ் கட்டியிருக்கிறோம். தேர்தல் முடியும்வரை அதே ‘மாஸோடு’ இருக்கவேண்டும். எனவேதான், தேர்தல் பிரச்சாரம் மற்ற நாட்களில் நடந்தால் ஒருவேளை கூட்டம் கூடாமல் போய்விட்டால் என்ன செய்து என்ற யோசனைக்குப் பிறகுதான் ‘சனிக்கிழமை’யை தேர்ந்தெடுத்திருக்கிறோம்’’ என்றார்.
இன்னொருவரோ, ‘அட போங்க… தளபதி வருகிறார் என்றால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லமாட்டார்கள்’ அவர்களின் எதிர்கால நலன் கருதிதான் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்திருக்கிறார் தளபதி’ என்று ஒரே போடா போட்டார்.
அட சனிக்கிழமையில் இவ்வளவு ரகசியம் இருக்கிறதோ..?