திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்தது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் இன்று 9ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இது தொடர்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில் சம்பத்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் (9.9.2025, செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சமயபுரம் நால்ரோடு, எம்ஜிஆர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி.பா.வளர்மதி அவர்கள் தலைமையிலும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.மு.பரஞ்ஜோதி. அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று இன்றைய தினம் காலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிரவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஏராளமான அ.தி.மு.க.வினரும், அந்தத் தொகுதி மக்களும் குவிந்தனர். தனது பணபலத்தால், முத்தரையர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வேற்று மாவட்டத்தில் இருந்து வந்து வெற்றி பெற்றவர்தான் கதிரவன்.
ஆனால், அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சையில் முறைகேடாக நடந்திருப்பதை மருத்துவத்துறை அதிகாரிகள் உறுதி செய்தும், கதிரவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனைக் கண்டித்து இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்ட கூட்டத்தைப் பார்த்து, தி.மு.க.வே மிரண்டு போயிருக்கிறது என்கிறார்கள்.
இனியாவது தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என காத்திருக்கிறார்கள் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள்!