திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை நடத்தி முடித்த பிறகு அமைச்சரிடம் கைகுலக்கிச் சென்றார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்!

ஐ.பி. வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்கள், அதிகாரிகள் கைகுலுக்கியதைப் பார்த்து விசிலடித்துக் கொண்டாடினார்கள். ஆனால், அமலாக்கத்துறை குறி வைத்தது அமைச்சருக்கு அல்ல… அமைச்சரின் மகன், மகளைத்தான் என தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

திண்டுக்கல்லில் நேற்று காலை 7 மணி முதல் துரைசாமிபுரத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, அவரது மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் வீடு, மற்றும் அவரது மகள் இந்திரா வீடு மற்றும் இரண்டு மில் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி வாரிய துறையின் அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது பல்வேறு முறைகேடு நடந்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை, சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் அப்போதைய உளவுத் துறை காவலர் ஜாபர் சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் இட ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றுள்ளது. இந்த வழக்குகள் சம்பந்தமாக கடந்த 2022ஆம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அமைச்சர் சொந்தமான வீடு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, மில் என திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஐந்து இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை செய்தனர்.

முதலில் அமைச்சர் மகள் இந்திராணியின் மில் ஒன்றில் நடைபெற்ற சோதனையானது முடிவடைந்தது. அதன் பின் 11 மணி நேரம் நடைபெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை முடிவடைந்தது. 15 மணி நேரம் பின்பு அமைச்சர் மகன் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவடைந்தது.

ஆனால், 17 மணி நேரம் அமைச்சர் மகள் இந்திராணியின் வீட்டில் நடைபெற்று வந்த நிலையில் திமுகவினர் ஏராளமானோர் அப்பகுதியில் கூடி அமலாக்கத்துறை சோதனைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்து வந்தனர். பின்னர் சில மணி நேரத்தில் சோதனையானது நிறைவு பெற்றது. இதேபோல் அவரது மில் ஒன்றில் நடைபெற்ற சோதனை முடிவடைந்தது.

ஏற்கனவே அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் ஆகியோரின் வீட்டில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பெரிய அளவில் ஆவணங்கள், பணம், நகை, எதுவும் சிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஒரு சில ஆவணங்களை மட்டும் ஸ்கேன் செய்து அவற்றை லேப்டாப்பில் எடுத்துச் சென்றிருக்கின்றனர் அதிகாரிகள்.

அதே நேரத்தில் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமாரின் வீட்டில் கிட்டத்தட்ட 15 மணி நேரம் சோதனை நடைபெற்றது. ஸ்கேனர் பிரிண்டர் உள்ளிட்டவை வீட்டுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் சொத்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் அமைச்சரின் மகள் இந்திராணியின் வீட்டில் தான் அதிக அளவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 17 மணி நேரம் இந்திராணியின் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் இரண்டு பைகள் சூட்கேஸ் மூலம் பல்வேறு ஆவணங்கள் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றி எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற சோதனைகளில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் எதுவுமே சிக்காத நிலையில் மகன் மற்றும் மகள் வீட்டை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், பெயருக்கு மட்டுமே அமைச்சர் வீட்டில் சோதனை நடந்தது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal