‘கோவில் நிதியில் ஏன் கல்லூரி கட்டுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியின் நியாயமான கேள்வியை தி.மு.க. அரசு திசை திருப்புகிறது. கோவில் நில செத்துக்கள் மற்றும் வருவாய் குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்’’ என்பது உள்பட சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார் தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… ‘‘கோவில் நிலங்களுக்கும், சொத்துக்களுக்கும் சந்தை மதிப்பில் குத்தகையும், வாடகையும் வசூலித்து வருவாயை அதிகரித்து விட்டு கல்லூரிகள் கட்டுங்கள்.

‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘‘அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாமல், கோவில் நிதியில் ஏன் கட்டுகிறீர்கள்?’’ என்று நியாயமான ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், திமுகவினரும் அதை வழக்கம் போல, “கோவில் நிதியை கல்விக்காக செலவழிக்க கூடாது என்கிறார். கல்விக்கு எதிராக பேசுகிறார்” என திசைதிருப்பி வருகின்றனர். “கோவில் நிதியில் கல்லூரி கூடாது” என்று திரு. பழனிசாமி அவர்கள் கூறவில்லை. “அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாதது ஏன்?’ என்பதுதான் அவரது கேள்வி.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற கட்டமைப்புகளை ஏதோ ஒரு வகையில் நிதி திரட்டி கட்டி விடலாம். ஆனால் அதைத் தொடர்ந்து திறம்பட நடத்திட, மாதந்தோறும் பெரும் நிதி தேவை. உதாரணமாக, ஓர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்றால், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான ஊதியம், மின் கட்டணம், குடிநீர், கழிவறை, தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பராமரிப்பு செலவுகளுக்கு பணம் தேவை. இதற்கான நிதி ஆதாரம் இல்லாவிட்டால் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டிடத்தை கட்டியும் எந்தப் பலனும் இல்லை.

கோவில் நிலத்தில், கோவில் நிதியில் கல்லூரி கட்டிடத்தை பிரமாண்டமாக கட்டிவிடலாம். ஆனால், அதை தொடர்ந்து நடத்திட, தேவையான நிதி ஆதாரத்தை அந்த கோவிலின் வாயிலாக பெறுவது என்பது, தற்போதைய நிலையில் சாத்தியமற்றதாக உள்ளது. கோவில் நிதியில் கட்டப்படும் கல்லூரிகளை, தனியார் கல்லூரிகள் போல நடத்த முடியாது. மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது. அதிக கட்டணம் செலுத்தி படிக்க ஏற்கனவே தனியார் கல்லூரிகள் உள்ளன. எனவே, இலவசமாகவோ அல்லது மிகமிக குறைந்த கட்டணத்திலோ மட்டுமே கோவில் நிதியில் கட்டப்படும் கல்லூரிகள் இயங்க வேண்டும். தற்போதைய நிலையில் இது சாத்தியமற்றதாக உள்ளது. எனவே தான் அரசு நிதியில் கல்லூரிகள் கட்டப்பட வேண்டும் என்பதை திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு, ஏராளமான நிலங்களும், சொத்துக்களும் உள்ளன. இந்த சொத்துகளுக்கும், நிலங்களுக்கும் சந்தை மதிப்பில் குத்தகையும், வாடகையும் வசூலித்தால், கோவில் நிதியில் கட்டப்படும் கல்லூரிகளை தொடர்ந்து சிறப்பாக நடத்த முடியும். ஆனால் ஹிந்து விரோத திமுக அரசு அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை என்பதை அதன் செயல்பாடுகளே காட்டுகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கட்ட, கோவில் நிலங்களை திமுக அரசு அபகரித்து வருகிறது. கோவில் நிலங்களில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்களுக்கு சந்தை மதிப்பில் வாடகை வசூலித்தாலே, பல பள்ளிகள், கல்லூரிகளை நடத்த முடியும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் குறித்தும் சொத்துக்கள் குறித்தும், இந்த நிலங்களுக்கும் சொத்துக்களுக்கும் தற்பொழுது வழங்கப்படும் மிகமிகக்குறைந்த வாடகைகள் குறித்தும், இந்த வாடகையின் நிலுவைத் தொகைகள் குறித்தும், திருக்கோவில் நிலங்களின், சொத்துக்களின் சட்டவிரோத பரிமாற்றங்கள் குறித்தும், இது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் குறித்தும், மிக முக்கியமாக இந்த கோவில் நிலங்களுக்கும், சொத்துக்களுக்கும் தற்போதைய சந்தை மதிப்பில் குத்தகையும் வாடகையும் வசூலித்தால் வரக்கூடிய நிதி ஆதாரம் குறித்தும் முழுவதுமாக வெள்ளை அறிக்கையை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பாக உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு முதலில் செய்ய வேண்டியது, கோவில் நிதியில் கல்லூரிகள் கட்டுவது அல்ல. கோவில் நிலங்களுக்கும், சொத்துக்களுக்கும் சந்தை மதிப்பில் குத்தகையும், வாடகையும் வசூலித்து வருவாயை பெருக்குவது தான் உடனடி தேவை. அப்படி வருவாய் அதிகரித்து விட்டு, அதிலிருந்து கிடைக்கும் நிதியில் ஒரு பகுதியை, கல்வி மருத்துவத்திற்காக செலவு செய்யலாம்.

கோவில் நிதியில் பள்ளிகள் கல்லூரிகள் கட்டப்பட்டால், அதில் வழக்கமான படிப்புகளோடு, இந்து சமயம் சார்ந்த படிப்புகளும் கட்டாயம் இடம் பெற வேண்டும் கோவில் நிதியில் கட்டப்படும் கல்வி நிலையங்களில், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்ற பக்தி பாடல்களுடன் துவங்கப்பட வேண்டும். கோவில் நிதியில் கட்டப்படும் கல்வி நிலையங்கள் ஆன்மிகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இதுவே கோவிலுக்கு பணம் கொடுக்கும் பக்தர்களின் எதிர்பார்ப்பு. இந்துக்களின் எதிர்பார்ப்பு’’ என்று கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal