அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமர்வு தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது.

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் -, பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். சீலை அகற்றக்கோரி பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், ஒரு மாதத்திற்கு பிறகுதான் தலைமை கழகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமர்வு விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: ‘‘ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் அல்ல. ஒருகட்சியின் இருதரப்பு மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னை ஆகும். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கோரமுடியும்?’’ என பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ‘‘மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அலுவலகத்தின் சாவியை மீட்க, ஓபிஎஸ் தரப்பு சட்ட வழிகளை நாடலாம்’’ எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal